பதிவு செய்த நாள்
23
மே
2021
04:05
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே விநாயகர் கோவிலை சேதப்படுத்திய, காட்டு யானைகளை, வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு விரட்டினர்.
கோவை வடக்கு, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, வனத்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு போதுமான பலன் கிடைப்பதில்லை. நேற்று முன்தினம் இரவு, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் இரண்டு குட்டிகளுடன், இரண்டு யானைகள் வந்தன. அங்கிருந்த விநாயகர் கோவில் கிரில்களை சேதப்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களுடன் வனத்துறையினரும், இணைந்து யானைகளை மலையடிவாரத்திற்கு விரட்டினர். இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே, மலையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், எச்சரிக்கை உணர்வுடன், நடமாட வேண்டும். யானைகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக வனத்துறையினர் உடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர்.