இன்று புத்த பூர்ணிமா : புத்தர் அவதரித்த, ஞானம் பெற்ற, மோட்சம் அடைந்த நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2021 10:05
புத்தர் அவதரித்ததும் வைகாசி மாத பவுர்ணமியன்றுதான். இதே நாளில் தான் புத்தர் அரச மரத்தடியில் தவமிருந்தபோது ஞானம் பெற்றார். அதேபோல் ஒரு வைகாசி பவுர்ணமியில் இப்பூவுலகைத் துறந்து மோட்சம் பெற்றார். இந்த நாளே புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது.
கபிலவஸ்து என்னும் நாட்டின் மன்னனான சுத்தோதனருக்கும் மகாமயாவுக்கும் மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர். இவர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார். தனது 29 - வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்தார். அத்துன்பங்களுக்கு என்ன காரணம் என்பதைத் தேடி அலைந்தார். இறுதியாக, கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்தார். முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞானஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அதுமுதல் அவர் கவுதம புத்தர் என அழைக்கப்பட்டார். பின் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கும் பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 - வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. புத்தபூர்ணிமா அன்று புத்தமதத்தினர் வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிவர். அன்று மடாலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும், வீடுகளிலும் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர். கீர் எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும். இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வைகாசி பவுர்ணமி: தமிழ் வருடப்பிறப்பின் படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். வைசாகம் என்ற சொல்லே காலப்போக்கில் வைகாசி என்று ஆனது. இம்மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டது. சூரியன் மேஷ ராசியை விட்டு, ரிஷப ராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் ரிஷப ராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம்மாதம் ஆகும். இம்மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு.