அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் நாகம்பட்டி வீரம்மாள் கோயிலில் நாயக்கர் கால நினைவு கல் கண்டெடுக்கப்பட்டதாக, அருப்புக்கோட்டை எஸ். பி .கே .கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் விஜயராகவன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: வீரமரணமடைந்த வீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் வகையில் நடுகல் எழுப்பி வழிபாடு செய்யும் வழக்கம் முன்னோர்கள் காலத்தில் இருந்தது. மக்கள் நலனுக்காக செயல்பட்டவர்கள் என்பதற்கு சான்றாக கிணறு வெட்டுதல், நீரோடை பராமரித்தல், சத்திரம் ஏற்படுத்துதல், கோயில் திருப்பணிகள் மேற்கொள்தல் போன்ற நலப் பணிகளை தொடரும் போது எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்பட்டால் அவர்களது சேவையை போற்றும் வகையில் உருவச்சிலைகள் நிறுவப்பட்டது.
இச்சிலைகள் நினைவுகள் என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் அருகில் நாகம்பட்டி வீரம்மாள் கோயிலில் நாயக்கர் கால நினைவு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13 சென்டிமீட்டர் உயரம், 73 சென்டிமீட்டர் அகலம் கொண்ட இதில் உள்ள ஆணின் உருவம், கைகளை கூப்பிய நிலையில் தலையில் தலைப்பாகை , காதில், கழுத்தில் அணிகலன்கள் உள்ளன. இச் சிற்பங்களின் மேலே கூடு என்ற கட்டடக்கலை கூறு காட்டப்பட்டுள்ளது. நீரோடை அருகில் அமைந்திருப்பதால் குடிமராமத்து பணி மேற்கொள்ளும் போது ஏதேனும் துர் மரணம் நிகழ்ந்தது நினைவாக இந்த நினைவு கல் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது,என்றார்.