பதிவு செய்த நாள்
01
ஜூன்
2021
06:06
காஞ்சி மகாபெரியவர் முன் ஆன்மிக அன்பர்கள் அமர்ந்திருந்தார்கள். ஓர் அன்பர் மகாபெரியவரிடம் ‘‘மன்மதன் கையில் கரும்பு வில் இருக்கிறது. ஆனால் அதே கரும்பு காமாட்சி தேவி கையிலும் இருக்கிறதே. இதன் பின்னணி என்ன’’ என்று கேட்டார். கேள்வி கேட்ட அன்பரைக் கனிவோடு பார்த்த மகாபெரியவர் பதில் சொல்லத் தொடங்கினார்.
பந்த பாச உணர்வைத் துாண்டுபவன் மன்மதன். தன் கையில் உள்ள கரும்பு வில்லைப் பயன்படுத்தி அம்பு எய்து ஆண், பெண் இடையே ஈர்ப்பைத் தோற்றுவிப்பவன். பின்னர் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு பந்த பாசங்களுக்கு ஆட்படுகிறார்கள். மன்மதன் ரதிதேவியின் கணவன். மன்மதனுடைய கரும்பு வில்லின் நாண் எல்லா நாண்களையும் போல் கயிறால் ஆனதல்ல. தொடர்ச்சியான வண்டுகளின் வரிசைதான் மன்மதன் வில்லின் நாணாக இருக்கிறது. அந்த நாணிலிருந்து ஐந்து மலர்களை அம்புகளாக்கி எய்கிறான் அவன். தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய மலர்கள்தான் அந்த அம்புகள்.
கரும்பு வில்லில், வண்டு நாணை இழுத்து, மலர் அம்புகளைப் பொருத்தி அவன் எய்தால் யாராயிருந்தாலும் பந்த பாசங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான். அதிலிருந்து தப்பிக்க முடியாது.
ஆனால் ஒருவரிடம் அவன் ஆற்றல் பலிக்கவில்லை. தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான் மேல் தன் கரும்பு வில்லைக் கொண்டு மலர்க்கணைகளை எய்தான். தன் தவத்தை கலைத்த மன்மதனை கடும் சீற்றத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான்.
பொதுவாக தோற்றவரின் ஆயுதம், வென்றவர் கைக்கு வருவது வழக்கம். அதன்படியே தோற்று எரிந்துபோன மன்மதனின் கரும்பு வில் சிவபெருமானின் கைக்கு வந்துவிட்டது. அந்தக் கரும்பை அன்னை காமாட்சி தேவி வாங்கித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள்.
அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும், பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். கட்டுமீறிச் சென்றால் துன்பம்தான். அதை உணர்த்தவே அன்னை தன்கையில் கரும்பை வைத்திருக்கிறாள்.
மன்மதனின் கரும்பு காமத்தைத் துாண்டக் கூடியது. அன்னை காமாட்சி தேவியின் கையில் உள்ள கரும்பு தன்னை வழிபடுபவர்களின் மனதிலிருந்து காமத்தை அகற்றக் கூடியது. இதுதான் மன்மதன் கையில் இருந்த கரும்பிற்கும், காமாட்சி கையில் உள்ள கரும்பிற்குமான வேறுபாடு.
காமாட்சியை வழிபட்டால், தேவியின் திருக்கரத்தில் உள்ள கரும்பின் கருணையால் நம் மனதில் தோன்றும் காம உணர்வை வெல்வோம். காம தகனம் செய்த சிவபெருமானின் மனைவி நம் உள்ளத்தில் உள்ள காமத்தைத் தகனம் செய்துவிடுவாள். எனவே காமாட்சி தேவியை வழிபட்டு அவள் அருளின் மூலம் மனதைத் துாய்மையாக்கிக் கொள்வோம்.
மகாபெரியவரின் விளக்கத்தைக் கேட்டு கூடியிருந்தவர்கள் பலனடைந்தார்கள்.