பதிவு செய்த நாள்
18
ஜூன்
2012
10:06
திருநெல்வேலி: செப்பறை அழகியகூத்தர் (தாமிரசபை) கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஞ்ச சபைகளில் ஒன்றான செப்பறை (தாமிரசபை) அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கொடி மரத்திற்கு விஷேச திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும், நடன தீபாராதனையும் நடந்தது. 20ம் தேதி அழகிய கூத்த பெருமானுக்கு திருவாதிரை அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 23ம் தேதி 7ம் திருநாளில் உருகு சட்டசேவையும், அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிவப்பு சாத்தி உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி உற்சவமும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி உற்சவமும் நடக்கிறது. 25ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளலும், 12.30 மணிக்கு ஆனித் தேரோட்ட உற்சவமும், அன்னதானமும் நடக்கிறது. 26ம் தேதி ஆனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம், மகா அபிஷேகம், பிற்பகல் ஒரு மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. அன்று இரவு பிற்கால அபிஷேகமும், இரவு அலங்கார தீபாரதனை, அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம், நடன தீபாராதனை, உட்பிரகாரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.