அயோத்தி: அயோத்தியில் ரூ.400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படவுள்ளது. தொலைத்தூர பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இதைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு ஏற்கெனவே உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநில கலாசாரத் துறை வசமுள்ள 9 ஏக்கர் நிலம் போக்குவரத்துத் துறையிடம் வழங்கப்படும். ரூ.400 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் இடம்பெறும். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து அயோத்திக்கும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இடையே பேருந்துகள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.