பதிவு செய்த நாள்
15
ஜூன்
2021
05:06
கோவை: பேரூராதீனம், சிரவையாதீனம் உட்பட, பல்வேறு நாடுகளிலுள்ள ஆதீனங்கள் இணைந்து நடத்திய, இணையவழியிலான திருவிளக்கு வழிபாடு, முப்பது நாட்களுக்கு பின்பு நேற்று நிறைவடைந்தது.
தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த, கடந்த மே 10லிருந்து, கொரோனா நோய் தொற்று ஒழியவும், மன அழுத்தம் நீக்கவும் பேரூராதீனம், சிரவையாதீனம், அகில பாரத துறவியர் சங்கம் இணைந்து அன்றாடம் மாலை 5:00 முதல் 6:00 மணி வரை, திருவிளக்கு வழிபாட்டை, இணைய வழியில் நடத்தினர்.பேரூராதீனம்சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில், சிரவையாதீனம் குமரகுருபர அடிகள் முன்னிலை வகித்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆதீனத் தலைவர்களும், திருமடத்தலைவர்கள், அருளாளர்கள், அயல்நாட்டு ஆதீனத் தலைவர்கள், திருமடத்தலைவர்கள், வாழ்த்துரை வழங்கினர்.சைவ அருளாளர்கள் அருளிய திருமுறைப் பாடல்கள், வைணவ ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தப் பாடல்கள், அம்மன் பாடல்கள், முருகப்பெருமான், விநாயகப் பெருமான் குறித்த அருட்பாடல்கள், ஓதுவா மூர்த்திகளைக் கொண்டு, இறை வழிபாடு மற்றும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. இலங்கை, மலேசியா நாடுகளில் உள்ள ஆதீனத் தலைவர்களும், தமிழக ஆதீனத் தலைவர்களும், அருளாளர்களும், வைணவ அருளாளர்களும் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். நேற்று மழைப்பதிகம் பாடி, வழிபாடு நிறைவு செய்யப்பட்டது.