பதிவு செய்த நாள்
15
ஜூன்
2021
05:06
நாகர்கோவில் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான மேற்கூரை தீ விபத்துக்கு அஜாக்கிரதை தான் காரணம், என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தீ விபத்து நடந்த, குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை, நேற்று இரண்டாவது முறையாக பார்வையிட்ட அமைச்சர் கூறியதாவது:தீ விபத்தில் சேதமான, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேற்கூரை சீரமைப்பு பணி நடக்கிறது. நான்கு பேர் குழு விசாரணைக்கு பின் தந்த தற்காலிக அறிக்கையில், அஜாக்கிரதை தான் விபத்துக்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவபிரசன்னம் முழுமையாக நடக்க இரண்டு நாட்கள் தேவை எனக் கூறியதன் அடிப்படையில், அது அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து கோவில்களில் உள்ள யானைகள் எண்ணிக்கை குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, கோவிலில் நேற்று தேவபிரசன்னம் துவங்கியது. பாறசாலை ராஜேஷ் போற்றி கணபதி ஹோமம் நடத்தினார். கேரள மாநிலம், வயநாடு ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி, தேவபிரசன்ன முடிவுகளை கூறி வருகின்றனர். தேவ பிரசன்னத்தில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் இரண்டு நாகர் சன்னிதி இருந்ததாகவும், அதில் ஒன்று காணாமல் போனதும் தெரிந்தது. தேவி கோவில் அருகே உள்ள சாஸ்தா கோவில் தான் மண்டைக்காடு கோவிலின் மூலஸ்தானம் என்பதும், பூஜை காரியங்களுக்கு மோசமான எண்ணெய் பயன்படுத்துவதும், கலப்பட சந்தனம் பயன்படுத்துவதும் தெரிந்தது.நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல சந்தன கட்டை வாங்கி அரைத்து பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இன்று மாலை தேவபிரசன்னம் நிறைவு பெறும்.