பதிவு செய்த நாள்
19
ஜூன்
2021
03:06
வேலுார் மாவட்டம் சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் யோகநரசிம்மர் கோயில் உள்ளது. பவுர்ணமியன்று இவரை தரிசித்து மலையை சுற்றினால் நினைத்தது நிறைவேறும்.
புராண காலத்தில் வாழ்ந்த வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் என்னும் முனிவர்கள் மோட்சம் அடைய விரும்பினர். இதற்காக கடிகாசல மலையில் நரசிம்மரை நோக்கி தவமிருந்தனர். இதையறிந்த காலன், கேயன் என்னும் அசுரர்கள் இடையூறு செய்தனர். அவர்களிடம் இருந்து முனிவர்களை விடுவிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் நரசிம்மர். அப்போது தன்னுடைய சங்கு, சக்கரத்தையும் கொடுத்தார். ஆஞ்சநேயரும் சக்கராயுதம் மூலம் அசுரர்களை வதம் செய்தார். இதன் பின் முனிவர்களின் தவம் தடையின்றி நிறைவேறவே, இறுதியில் யோக நரசிம்மர் காட்சியளித்து மோட்சம் அளித்தார். அவரே இந்த மலைக்கோயிலில் மூலவராக இருக்கிறார்.
500 அடி உயரமுள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரின் சன்னதி உள்ளது. மலைக்குச் செல்ல 1305 படிகள் உள்ளன. மலையிலிருந்து 4 கி.மீ. துாரத்திலுள்ள சோளிங்கரில் உற்ஸவரான பக்தவத்சலர், சுதாவல்லித்தாயாருடன் தனி கோயிலில் இருக்கிறார். அமிர்தவல்லி தாயாருக்கும் இங்கு சன்னதி உள்ளது. அமிர்த தீர்த்தம், தக்கான் குளம் என்னும் தீர்த்தங்கள் இங்குள்ளன. பெரிய மலைக்கு எதிரிலுள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அக்கோயிலை அடைய 406 படிகள் ஏற வேண்டும். யோகநிலையில் உள்ள ஆஞ்சநேயரின் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள நரசிம்மரின் பாதங்களை நோக்கியபடி இருப்பது சிறப்பு.
மன நோயாளிகள் குணம் பெறவும், விரும்பிய மணவாழ்க்கை, குழந்தைப்பேறு உண்டாகவும், வியாபாரம் செழிக்கவும், நினைத்தது நிறைவேறவும் நரசிம்மரை தரிசித்து பவுர்ணமியன்று அன்னதானம் செய்கின்றனர். வீடு கட்டும் பணி விரைவில் நிறைவேற மலைப்பாதையில் கற்களை அடுக்குகின்றனர். முயற்சியில் வெற்றி கிடைக்க மலையைச் சுற்றி வருகின்றனர்.
எப்படி செல்வது : வேலுார் – திருத்தணி வழியில் 60 கி.மீ.,,
விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
நேரம்:
மலை கோயில்: காலை 8:00 – மாலை 5:30 மணி.
அடிவார கோயில்: காலை 6.00 – 12.00, மாலை 5.00 – இரவு 8.30 மணி
அலைபேசி: 044 – 2232 1221, 04172 – 260 255