பதிவு செய்த நாள்
21
ஜூன்
2021
05:06
ஹாப்பூர்-உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் கொரோனாவின் தீவிரத்தை உணராமல், நேற்று கங்கையில் புனித நீராட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எச்சரிக்கைஇங்கு கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.எனினும், கொரோனாவின் தீவிரத்தை உணராமல், மக்கள் அதிக அளவில் பொது வெளிகளில் சுற்றித் திரிகின்றனர்.
இது, வைரஸ் பரவலை மீண்டும் வேகமெடுக்க வழிவகுக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கிடையே கங்கை தசரா திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உ.பி.,யின் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை படித்துறையில் ஏராளமான மக்கள் கூடினர். முக கவசத்தை முறையாக அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் திரண்ட மக்கள், கங்கையில் இறங்கி புனித நீராடினர். இந்த படங்கள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஆபத்துகொரோனா வைரசின் மூன்றாம் அலை, அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படலாம் என, எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொள்ளும் மக்களின் இத்தகைய செயல்களால், வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.