மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார் முல்லா. அப்போது அடிக்கடி மன்னருடன் சேர்ந்து உணவு சாப்பிடுவார். ஒருநாள் உணவில் பீன்ஸ் சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிக பசி என்பதால் பீன்ஸ் காயை விரும்பிச் சாப்பிட்டார். அப்போது ‘‘உலகிலேயே சிறந்த காய் பீன்ஸ் என்று தோன்றுகிறது. நீர் என்ன நினைக்கிறீர்?" எனக் கேட்டார் மன்னர். ‘‘சந்தேகமில்லை மன்னா...பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்ல முடியாது’’ என்றார் முல்லா. உடனே சமையற்காரனை அழைத்து, ‘‘இன்று முதல் பீன்ஸ் காய்க்கு தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் பீன்ஸ் சேர்த்து விடு" என உத்திரவிட்டார். தொடர்ந்து பீன்ஸ் சாப்பிடவே மன்னருக்கு சலிப்பு ஏற்பட்டது. மீண்டும் ஒருநாள் மன்னருடன் உணவு சாப்பிட்ட அமர்ந்தார் முல்லா. அப்போது உணவில் பீன்ஸ் பரிமாறப்பட்டது. அப்போது மன்னர், ‘‘உலகிலேயே மிக மோசமான காய் பீன்ஸ் என நினைக்கிறேன். முல்லா... நீர் என்ன நினைக்கிறீர்’’ எனக் கேட்டார். ‘‘ஆம் மன்னா...எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது’’ என்றார். ‘‘ பத்து நாட்களுக்கு முன்பு சிறந்த காய் பீன்ஸ் என்றீரே...இப்போது தலைகீழாக மாற்றுகிறீரே" என்றார் மன்னர். சிரித்தபடி முல்லா, ‘‘என்ன செய்யட்டும் மன்னா... நான் வேலை பார்ப்பது தங்களிடம் தானே... பீன்ஸ் காயிடம் இல்லையே’’ என்றார்.