கவிஞரான வேர்ட்ஸ்வொர்த் ஒருநாள் மலைச்சாரல் பக்கமாக நடந்து சென்றார். பாறையின் இடுக்கில் மலர்ச்செடி ஒன்று எட்டிப் பார்ததபடி நின்றிருந்தது. அதைக் கண்டதும், "சாட்டர்டன்... நீ இங்கேயா இருக்கிறாய் என கண்ணீர் ததும்ப பார்த்தபடி நின்றார். யார் அந்த சாட்டர்டன் தெரியுமா... பதினான்கு வயது இளம் கவிஞரான இவன் தத்துவக் கவிதைகள் புனைவதில் வல்லவன். அநாதையான அவன் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தான். தான் எழுதிய கவிதைகளை ரொட்டிக் கடைக்காரன் ஒருவனிடம் காட்டி, ‘‘ஐயா...பசிக்கிறது ஏதாவது கொடுங்கள் எனக் கைநீட்டி நிற்பான். அவன் மீது இரக்கம் கொண்டு கடைக்காரன் துண்டு ரொட்டிகளைக் கொடுப்பான். அரை வயிறு தான் அதில் நிரம்பும். அதன் பின் அருகிலுள்ள சாக்கடை ஓடும் கால்வாய் மீது மயங்கியபடி துாங்குவான். ஒருநாள் கவிதை எழுதி அதில் புகழ் மிக்க கவிஞரான தாமஸ் கிரேயின் பெயரை எழுதி பத்திரிகையாளரிடம் கொடுத்து, ‘‘இதை தாமஸ் கிரே கொடுத்தனுப்பினார். அவரால் வரமுடியவில்லை என்பதால் நான் வந்தேன். ஏதாவது காசு கொடுங்கள் என வேண்டினான். அவரும் கொடுத்தனுப்பினார். அப்போதெல்லாம் கவிஞர் தாமஸ் கிரேயின் கவிதைகள் பத்திரிகையில் வெளியாவது பெருமையாக கருதப்பட்டது. தனக்கு கிடைத்த பணத்தில் ரொட்டி வாங்கி சாப்பிட்டான் சாட்டர்டன். சாக்கடை கால்வாயில் படுத்து துாக்கத்தில் ஆழ்ந்தான். பத்திரிகையில் வெளியான பாடலைக் கண்ட தாமஸ் கிரே வியப்பில் ஆழ்ந்தார். பத்திரிகையாளரிடம் விசாரித்த போது, ‘சிறுவன் ஒருவன் தாங்கள் கொடுத்தனுப்பியதாகச் சொல்லி கவிதையை கொடுத்தான் என்றார். கவிதையோ அற்புதமாக இருந்தது. சிறந்த கவிஞனாகத் தான் அந்த சிறுவன் இருக்க முடியும் என்பதை உணர்ந்துது அவனை சந்திக்க ஓடினார் தாமஸ் கிரே. விசாரித்த போது ரொட்டிக் கடைக்காரனுக்குத் தான் அவனைத் தெரியும் என பதில் கிடைத்தது. கடைக்காரரோ, ‘‘அதோ அந்த கால்வாய் மீது துாங்குவான் என்றார். அங்கே சென்ற தாமஸ் கிரே சிறுவனை எழுப்பிய போது அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரத்திற்கு முன்பே இறந்தது தெரிய வந்தது. இந்த விபரத்தை அறிந்த வேர்ட்ஸ் வொர்த் அழகிய மலர்களைக் காணும் போதெல்லாம் சாட்டர்டனை எண்ணி குழந்தை போல கண்ணீர் சிந்தி வருந்துவார். நல்ல நெஞ்சங்கள் ஆண்டவரின் அன்புக் குழந்தைகளை ஒருபோதும் மறப்பதில்லை.