சீனா, இந்தியா இடையே போர் நடந்த காலகட்டம். போருக்கு பெரிய அளவில் நிதி தேவைப்பட்டதால், மக்கள் தங்களால் இயன்ற அளவு தங்கத்தை கொடுத்து உதவுமாறு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதற்கு ஆதரவு தெரிவித்த காஞ்சி மகாபெரியவர் வானொலி மூலம் அறிக்கை விடுத்தார். ‘‘அன்னை பராசக்திதான் நம்மையெல்லாம் காப்பாற்றி அருள்பவள். பராசக்தி பல்வேறு திருநாமங்களில் நாடெங்கும் கோயில் கொண்டிருக்கிறாள். அம்மன் கோயில் இல்லாத இடம் நம் பாரத தேசத்தில் ஏது? காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சியாக, காசி விசாலாட்சியாக தரிசனம் தருபவள் பராசக்தியே. காஷ்மீரில் ஷீரபவானி என அவள் பெயர் பெறுகிறாள். மகாராஷ்டிராவில் அவளின் திருநாமம் துளசாபவானி. பாஞ்சாலத்தில் ஜ்வாலாமுகி. கூர்ஜரத்தில் அம்பாஜி என்கிறார்கள். வங்காளத்தில் காளியாக கையில் பல ஆயுதங்களுடன் காட்சி தருகிறாள். அஸ்ஸாமில் காமாக்யா என்கிறார்கள். கர்நாடகத்தில் சாமுண்டியாகவும், கேரளாவில் பகவதியாகவும் அருள்புரிகிறாள். இப்படி நாடெங்கும் பராசக்தி வெவ்வேறு பெயர்களில் குடியிருக்கிறாள். மகாலட்சுமியை எட்டு லட்சுமிகளாக நாம் வழிபடுகிறோம். அதில் விஜய லட்சுமியும் ஒன்று. போர் நடக்கும் இந்த காலகட்டத்தில் நமக்கு வேண்டியது ஜெயம் அதாவது வெற்றி. அதற்கு விஜயலட்சுமியின் அருள்தான் தேவைப்படுகிறது. லட்சுமியாக வடிவம் கொண்டிருப்பவளும் அந்த பராசக்தி தான். அவளுக்கு ஹைமவதி என்றும் பெயருண்டு. ஹேமம் என்றால் தங்கம். நம்முடைய தாய்நாட்டைக் காக்க தங்கத்தை அர்ப்பணிக்கத் தயங்கக் கூடாது. கோயில் இல்லாத ஊரே நம் நாட்டில் கிடையாது. அவரவர் ஊரிலுள்ள அம்பிகை கோயிலில் எள் முனையளவு தங்கத்தையாவது அம்பிகைக்குச் சார்த்தவேண்டும். அதை அப்படியே நாட்டிற்காக வழங்க வேண்டும். இப்படி நாம் அளிக்கும் தங்கத்தில் அந்த அம்பிகையின் எல்லா வடிவத்தின் அருளும் கலந்திருக்கும். இந்தத் தங்கம் நாட்டு நலனுக்குப் பயன்படும் போது விஜயலட்சுமி கட்டாயம் அருள்புரிவாள். போரில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். எனவே மக்கள் ஒற்றுமை காத்து நாட்டு நலனுக்காகத் தங்கத்தை வழங்க வேண்டும்’’ என்றார் வானொலி மூலம் வெளியான காஞ்சி மகாபெரியவரின் செய்தி பட்டி தொட்டியெல்லாம் அடைந்தது. தேசபக்தி துாண்டப்பட்ட மக்களின் மனதில் நாட்டுப்பற்று எழுந்தது. தங்கத்தைக் கொடுப்பதில் மக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். . இந்திய சீனப் போரில் நம் நாடு வெற்றி பெற்றது. சுவாமிகளின் தங்கமான அருள்வாக்கால் விஜயலட்சுமி நம் நாட்டைக் காப்பாற்றினாள்.