ஒரு சமயம் செம்பை வைத்தியநாத பாகவதர் தலைமையில் பாடகி எம்.எஸ்., சுப்புலட்சுமிக்கு பாராட்டு விழா நடந்தது. பெரிய மாலை ஒன்றை எம்.எஸ்.,க்கு அணிவிக்கும்படி பாகவதரிடம் வழங்கிய போது, ‘‘ எம்.எஸ்., ஒரு பெண்மணி. அவருக்கு நான் மாலையிட இந்த சபை அனுமதிக்கிறதா?’’ எனக் கேட்டார்.
அனைவரும் மவுனம் காத்தனர். மீண்டும், ‘‘எம்.எஸ்.ஸின் கணவர் சதாசிவம் அனுமதிக்கிறாரா?’’ என கேட்க அவர் அனுமதித்தார்.
அதன்பின் ‘‘என் துணைவியார் மாலையிட அனுமதிக்கிறாரா?’’ எனக் கேட்க அவரும் ஏற்றார். கடைசியாக, ‘‘எம்.எஸ்., அனுமதிக்கிறாரா? ’’ எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன் எம்.எஸ்.,சும் தலையாட்டினார். ஆனாலும் செம்பை பாகவதர், ‘‘எத்தனை பேர் அனுமதி அளித்தாலும் ஏதோ ஒன்று எனக்கு உறுத்துகிறது. அதனால் திரு.சதாசிவம் அவர்களை மாலை அணிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என மாலையைக் கொடுத்தார்.
எம்.எஸ்.,க்கு மாலையை கணவர் சதாசிவமே சபையில் அணிவித்தார். கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
செம்பை பாகவதரை தடுத்த அந்த ஏதோ ஒன்று என்ன?
அதுவே நம் பாரத பண்பாடு! கலாச்சாரம்! பாரம்பரியம்!
இது இன்றளவும் நம்மிடம் இருப்பதால் தான் உலகம் இந்தியாவைக் கண்டு வியக்கிறது.
பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை. பெரியவர்கள் வாழ்ந்து காட்டியபடி இளைய தலைமுறையினரும் பண்பாட்டைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.