பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
04:07
அவிநாசி: அவிநாசி, நடுவச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த கரிவரதராஜர் பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவிநாசி அருகே உள்ள நடுவச்சேரியில், பல நூறாண்டு பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும், ஏராளமானோர் இங்கு வந்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம். வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்படும். ஆனால், கோவில், பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோவிலையொட்டி உயரமாக வளர்ந்துள்ள மரங்களின் வேர், கோவிலின் உட்புற கூரையின் வெளியே தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. "இங்கிருக்க சாமி, கேட்டதையெல்லாம் கொடுக்கும் சக்தி வாய்ந்ததுங்க. மழை பெய்யும் போது, கூரையிலிருந்து மழை நீர் ஒழுகி, கோவிலுக்குள்ள குளமாக தேங்கி நிற்கும். இந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றிய பிறகு தான் பூஜை நடக்கும். இந்த கோவிலை பராமரிக்க, இந்து சமய அறநிலைய துறையினருக்கு ஏனோ மனசு வரல," என்றார் அங்கிருந்த ஒரு பக்தை. மற்றொரு பக்தர் கூறுகையில்," பொது மக்களே சேர்ந்து, இக்கோவிலை புனரமைத்து கொள்ள அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு நன்கொடை அளிக்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இக்கோவிலை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு," என்றனர். கோவில் செயல் அலுவலர் சந்திர மோகனிடம் கேட்ட போது, "கரிவரதராஜர் பெருமாள் கோவிலை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.