திருச்சி: திருப்பதி வேங்கடமுடையான் கோயிலில் நாளை (ஆடி மாத பிறப்பு) ஆனி வார ஆஸ்தான உற்சவம் நடக்கவுள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து ஆண்டு தோறும் கொண்டு செல்லப்படும் வஸ்திர மரியாதைகள் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை சமர்ப்பிக்கப்டும்.
ஸ்ரீரங்கத்துக்கும் , திருவேங்கடத்துக்கும் உள்ள தொடர்பு பாரம்பரியம் மிக்கது. திருமலை வேங்கடுமுடையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கில் குவித்த வரும் உண்டியலை அங்கு நிர்மாணித்து அதில் ஷதனஆகர்ஷண சக்தியை நிலைப்படுத்தியவர் ஸ்ரீராமானுஜர். இதனால் தான் திருப்பதி கோயிலில் உண்டியலை பார்த்தபடி ஸ்ரீராமானுஜருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. திருமலைக்கும் , ஸ்ரீ ரங்கத்திற்கும் நீண்ட காலமாக மங்கள பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. அதன்படி, ஸ்ரீ ரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் வேங்கடமுடையான் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டு தோறும் ஆடிமாத பிறப்பன்று திருமலை கோயிலில் நடக்கும் ஆனி வார ஆஸ்தான உற்சவத்தன்று சமர்பிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு திருமலையில் நாளை (16-ம் தேதி) ஆனி வார ஆஸ்தான உற்சவம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு இன்று (15-ம்) தேதி அதிகாலை புறப்பட்டு இரவு திருமலை சென்றடைந்து , அடுத்த நாள் ஆடி மாதம் முதல் தேதி (ஜுலை -16) திருமலை கோயில் ரங்கநாயகலு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்படும். முன்னதாக இந்த மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு நேற்று மாலை வைக்கப்பட்டன.