பதிவு செய்த நாள்
20
ஜூன்
2012
04:06
63வது படலத்தில் கங்காதர ஸ்வாமியின் பிரதிஷ்டை கூறப்படுகிறது. முதலில் அதை அமைக்கும் முறையும், பிரதிஷ்டை முறையும் கூறுகிறேன் என்பதாக உறுதி செய்யப்படுகிறது. பிறகு அந்த மூர்த்தி நான்கு கையும், மூன்று கண்ணும், ஜடாமகுடத்துடன், அலங்கரிக்கப் பட்டதாகவும் நின்ற கோலத்தை உடையதும் பிரசன்னமான முகத்தை உடையதாகவும் உள்ள தேவன் ஆவார் அவருடைய பார்ஸ்வஹஸ்த்தத்தில் மானும் மழுவும் முன்பக்க மாய் உள்ள வலதுகையில் அபயமும், இடதுகையில் கடக முத்திரையையும் கல்பிக்கவும். கடக முத்திரை உள்ள கையால், கங்கையுடன் கூடியதான ஒருஜடையை கையில் தரித்துக் கொண்டு நின்ற கோலத்தில் ஸ்வாமி இருக்கிறார் ஸ்வாமியின் (கூடிய) இடது பாகத்தில் லக்ஷணத்துடன் கூடிய தேவியை அமைக்கவும் வலதுபாகத்தில் இரண்டுகை, இரண்டு கண்கள், உடைவரும் ஹ்ருதய பூர்வமாக மஸ்தகத்தில் அஞ்சலியை உடையவராகவும் தொங்குகின்ற ஜடையை உடையவாரகவும் மரவுரியை தரித்தவராகவும் உள்ள பகீரதனை அமைக்கவும், இவ்வாறு அமைக்கப்பட்ட லக்ஷணங்களை உடையவர் கங்காதரர் ஆவர் என்று நூலால் கோடிட்டு காண்பிக்கும் முறைப்படி கங்காதர மூர்த்தியின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைமுறையும் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டபடி நல்ல, காலத்தில் அங்குரார்பணம், நயனோன் மீலனம், ரத்னன் நியாஸம் முதலியவைகள் செய்யவும் என கூறி கங்கைக்கு ரத்னன்நியாஸம் செய்யவேண்டாம். பகீரதனுக்கு பஞ்சரத்னநியாசம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம், செய்யவும் என்று கூறி அதன் செய்முறை விளக்கப்படுகிறது. பிறகு முன்பு கூறிய முறைப்படி யாகமண்டம் செய்து அங்கு குண்டம் அமைக்கவும் என வர்ணிக்கப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாக வாசனம், வாஸ்து ஹோமம் செய்து, மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து, சயனமும் அமைக்கவும். பிறகு ஜலாதி வாச மண்டபத்திலிருந்து ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்து பூஜிக்கவும் என கூறி பகீரதன், கங்கை, தேவி, இவர்களுக்கு தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.
பிறகு பிம்பங்களுக்கு சயனாரோபணம் செய்யவும். பகீரதன், தனியான பீடத்தில் இருந்தால் அந்த பிம்பத்தை ஸ்வாமியின் பாத தேசத்தில் சயனம் செய்விக்கவும். இவ்வாறு சயானாதி வாசவிதி கூறப்படுகிறது. பிறகு கும்பங்களை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. சிவனுடைய தலைபாகத்தில் சிவ கும்பம் வர்தனியையும் ஸ்தாபிக்கவும். பிறகு பகீரதனுக்கும், கங்கைக்கும், சிரோபாகத்தில் கடத்தை ஸ்தாபிக்கவும், கும்பத்தை சுற்றி அஷ்டவித்யேஸ்வர கும்பங்களை ஸ்தாபிக்கவும் முன்பு கூறிய உருவத்யான முறைப்படி ஆசார்யன் சந்தனம், புஷ்பம் இவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவும். தத்வ தத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்தீஸ்வரர், நியாசம் செய்யவும். பகீரதனுக்கு பகாரம் முதலியதான பஞ்ச மூர்த்தி மூர்த்தீச்வரர் நியாசம் சத்யோ ஜாதாதி மந்திரங்களால் செய்யவும் என கூறி பகீரதனின் மூல மந்திரமும் ஹருதயாதி ஷடங்கமூல மந்திரமும் கூறப்படுகின்றன. கங்கைக்கும் அதற்கு கூறப்பட்டுள்ள முறைப்படி, தத்வதத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்திஸ்வர நியாசம் செய்யவும் என கூறி கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. குண்ட அக்கினி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்யவும் என கூறி ஹோமத்தின் திரவ்ய நிரூபண முறையாக ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் முதலானவர்களுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும். அந்தந்த ஸ்வாமிகளுக்கு முன்பாக கும்பத்தை வைத்து மந்திரம் நியாசம் செய்யவும் என கூறி மந்திரன் நியாசம் விளக்கப்படுகிறது. இங்கு கங்கைக்கும், பகீரதனுக்கும், மந்திரன் நியாச முறை நிரூபிக்கப்படுகிறது. தேவியானவள் ஒரே ஆசனத்துடன் கூடி இருந்தால் தனிமையாகவே பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த மூர்த்திக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என கும்பாபிஷேக விதி கூறப்படுகிறது. பிறகு கல்யாண உத்ஸவம் செய்யவும். கல்யாண உத்ஸவம் முடிவில் ஸ்நபனமும் உத்ஸவமும் செய்யவும். அதிகமாக நைவேத்யம் செய்வது யஜமானனின் விருப்பப்படி செய்யவும் என கூறப்படுகிறது. முடிவில் யார் இந்த கங்காதார் பிரதிஷ்டையை பக்தியோடு செய்கிறானோ அவன் தன்னுடைய பந்து ஜனங்களுடன் கூடி சவுக்யமாக இருந்து தன்னுடைய சரீரம் பிரியும் பொழுது சிவஸ்தானத்தை அடைகிறான் என்று பலஸ்ருதி கூறுகிறது. இவ்வாறு 63 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. கங்காதர பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையுடன் கூடியதாக சொல்கிறேன். நான்கு கைகள், மூன்று கண்களுடன் ஜடையுடன் கூடிய மகுடத்தை தரித்தவராய்
2. வலது கை அபயமாகவும், இடது கை கடக முத்ரையுடன் கூடியதாகவும், அந்த கடக கையினால் ஜடையுடன் கூடிய கங்கையை தரித்தவராய்
3. அழகு நிறைந்து இருக்கின்றவராய் பெண் மான் மழுவுவோடு கூடியனவராய் இருப்பார் ஜடையோடு சேர்ந்த உயர்ந்த கையானது காதின் உயரத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.
4. பிறகு ஜடையின் நடுவில் வளைந்த வடிவுடன் இருமுகம் கொண்ட கங்கையுடன் நின்ற கோலத்தில் அமைக்கவும். அந்த பிம்பத் தலைப்பாகை மூக்கிற்கு நேராகவும் வலது பாத நடுவிலுமாக
5. ஹ்ருதயத்திற்கு, இடப்பாகத்திலும், தொப்பூழ், வயிறு பிரதேசத்தின் வலது பக்கத்திலும் சூத்திரமிடவும், இடுப்பு பாக சூத்ரத்திலிருந்து நான்கு மாத்திரை அளவும் வலது முழங்காலிலிருந்து மூன்றங்குலம் ஆகும்.
6. இரண்டு கால் கட்டை விரல்களின் இடைவெளி பதினைந்து அங்குலமாகும். இரண்டு குதிகால்களின் இடைவெளி ஐந்து அங்குலமும் ஆகும். இடது காலில் முக அமைப்பு சூத்திரத்திலிருந்து இடது பாகத்தில் மூன்றங்குலமாகும்.
7. ஹே முனிபுங்கவர்களே, மற்ற சூத்திர அமைப்புகளை சந்திர சேகரரைப் போன்றதாகவும் சுவாமிக்கு இடது பாகத்தில் தேவியையும் அமைப்புடன் கூடியதாக அமைக்க வேண்டும்.
8. பகீதரனை சுவாமியின் தொப்பூழ் வரை அளவுள்ள சரீரத்தை உடையவராகவோ அல்லது சுவாமியின் மார்பு அல்லது கழுத்து வரை தாலப்ரமாணம் உள்ளவராகவும் தொங்குகின்ற ஜடையை உடையவராகவும்
9. மரவுரியை தரித்தவராயும் இரண்டு கைகளை இதயம் அல்லது மஸ்தகத்தில் தொழுத வண்ணமாயும், இரண்டுகைகள் இரண்டு கண்களுடன் கூடியவராயுமான பகீதரனுடன் கங்காதரர் இருக்கட்டும்.
10. சுபமான காலத்தில் அங்குரார்ப்பணம், ரத்னநியாஸம், நயனோன்மீலனம் செய்யவேண்டும். கங்கைக்கு ரத்னந்யாஸமின்றி நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.
11. பகீதரனுக்கு ஐந்து ரத்னத்தால் செய்யப்பட்ட ரத்ன நியாஸத்துடன் பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம்
12. ஜலாதிவாசம், யாகம் செய்ய தகுதியான மண்டபங்கள் யாவும் முன் சொல்லியபடி அமைத்து (நாற்கோண) குண்டங்களை ஒன்பது, ஐந்து, ஒன்று என்றும் கணக்கில் அமைத்து
13. கண் திறந்த பிறகு சிற்பியை அனுப்பி விட்டு அந்தணர்களுக்கு உணவளித்து பிறகு புண்யாக வாசனம், பிரோக்ஷணத்தையும், வாஸ்த்து ஹோமத்தையும் செய்ய வேண்டும்.
14. ஸ்தண்டிலத்தில் பிம்பத்தை சயனம் செய்வித்து பின் ஆசார்யன் பகீரதனுக்கும் கங்கைக்கும், சுவாமிக்கும் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.
15. பகீதரன் தனியாக பீடத்துடன் இருப்பின் சுவாமியின் பாதபிரதேசத்தில் அதை சயனம் செய்வித்தல் வேண்டும்.
16. ஸ்வாமிக்கு தலை பாகத்தில் வஸ்த்ரம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தையும், வர்த்தனீயையும், பகீதரனின் தலைபாகத்தில் பகீதரனின் கும்பத்தையும் வைத்து
17. ஸ்வர்ண பங்கஜங்களாலோ கங்கா கும்பத்தையும் அலங்கரிக்க வேண்டும். சுற்றி எட்டு குடங்களை வைத்து வித்யேச்வரர்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.
18. ஆசார்யன், முன் சொல்லியபடி ரூபதியானங்களுடன் எல்லா தேவதைகளையும் சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் முறைப்படி பூஜிக்க வேண்டும்.
19. பரமேஸ்வரனுக்கு முன் போல் தத்வ தத்வேஸ்வர பூஜையும், பகீதரனுக்கு ஐந்து மூர்த்தீசர்களையும் பூஜிக்க வேண்டும்.
20. முன் சொல்லியபடி ஐந்து மூர்த்திகளையோ பூஜிக்க, மூர்த்தீச்வரர்களையோ நான்காவது (ப) பகாரத்திடனோடு கூடிய சத்யோஜாதம் முதலியவைகளையோ பூஜிக்க வேண்டும்.
21. மூன்றாவது பகார எழுத்தின் முடிவான (ப) நான்காவது பகாரத்தினுடன் பதினான்காம் எழுத்தான அவு ஆறாவது எழுத்தான ஊ உடன் புள்ளியுடன் சேர்த்து பவும் பகீரத என்ற வார்த்தையை நான்காம் வேற்றுமை உடையதாக கூறுவது மூல மந்திரமாகும்.
22. பகீதரனுடைய பீனாக்ஷரத்தினாலேயே ஹ்ருதயம் முதலான அங்கங்களுக்கு மந்திரங்களைக் கூற வேண்டும். கங்கைக்கு அதன் பூஜை முறையின் கூறியுள்ளபடி பூஜிக்க வேண்டும்.
23. குண்டங்களில் அக்னி கார்யங்களை முறையாகவும் சமித்து, நெய், அன்னம், பொறி முதலான பொருட்களால் ஹோமம் செய்யவும். வஸ்த்ரம் தங்க மோதிரம் முதலியவைகளால்
24. தட்சிணையையும் ஆசார்யர்களுக்கு கொடுத்து பின் மந்த்ர நியாஸம் செய்து தேவருக்கு முன்னால் கலசங்களை வைத்து குருவானவர் பூஜிக்க வேண்டும்.
25. சிவ கும்பத்திலிருந்து பீஜங்களை சுவாமியின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்த்தினீ கும்ப மூலத்தை பீடத்தில் சேர்க்க வேண்டும்.
26. மற்றுமுள்ள கும்ப பீஜங்களை பீட பத்மங்களில் சுற்றிலும் சேர்க்கவும். கங்கையின் மூலத்தை கங்கையின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.
27. பகீரதனுடைய கடத்தினுள் இருக்கும் பீஜத்தை பகீரதனுடைய ஹ்ருதயத்தில் சேர்த்து அந்த கும்ப ஜலத்தை அந்தந்த மூர்த்திகளுக்கும் அபிஷேகிக்க வேண்டும்.
28. சுவாமி பீடத்துடன் தேவீ இருக்குமெனில் வர்த்தினீ கும்பத்தை தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். தனி பீடத்துடன் கூடிய தேவியாகில் பிரதிஷ்டையை தனியாக செய்ய வேண்டும்.
29. இறுதியில் கல்யாணத்தையும் செய்யவும், பின் ஸ்நபனம், உத்ஸவம், செய்ய வேண்டும். கர்தாவின் விருப்பம்போல் மிகுந்த நைவேத்யத்தையும் செய்ய வேண்டும்.
30. இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் கூறியபடி செய்யவும். ஈஸ்வரன் பகீரதனுடன் சேர்ந்தோ இல்லாமலோ இருப்பார்.
31. இவ்வாறு கங்காதரப் பிரதிஷ்டையை எந்த மனிதர் செய்கிறாரோ அவர் இப்பூவுலகில் ஸகல சுகமும், அடைந்து தன் பந்து ஜனங்களுடன்
32. அடைய முடியாத சிவபதத்தை தன் சரீர இறுதியில் அடைவார்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கங்கா பிரதிஷ்டை விதியாகிற அறுபத்தி மூன்றாவது படலமாகும்.