பதிவு செய்த நாள்
21
ஜூலை
2021
12:07
இஸ்லாத்தின் ஐந்தாவது துாணாக இருப்பது ஹஜ் பெருநாள். அரேபியாவில் மெக்கா நகரிலுள்ள காபாவிற்கு செல்லும் பயணத்திற்கு ஹஜ் என்று பெயர். வசதி உள்ளவர்களின் மீது ஜகாத் கடமையாக்கப்பட்டது போல, காபாவுக்கு பயணம் செய்ய பணவசதியும், உடல் நலமும் உள்ளவர்களுக்கு ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
புண்ணிய பயணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மூன்று. அதில் முதலிடம் பெறுவது காபா. மற்றவை மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந்நபவி, பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தீஸ். முஸ்லிம்கள் காபா இருக்கும் திசை நோக்கி தொழுகை செய்வர். காபாவின் சுற்றுவட்டாரத்தில் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. அங்கு தஞ்சம் புகுந்தவர்களையும் துன்புறுத்தக் கூடாது.
இறைவனால் போர் ஹராமாக்கப்பட்ட மாதங்களில், ஹஜ் கடமையை நிறைவேற்ற நிர்ணயம் செய்யப்பட்ட மாதங்களில் துல்ஹஜ் மாதமும் அடங்கும். ஏக இறைக் கோட்பாட்டின் தலைநகரம் என்பதை எடுத்துக்காட்ட முதன் முதலில் கட்டப்பட்ட இறை இல்லம் காபா. முகம்மது நபி காலத்திற்கு முன்பே அரேபியர்கள் ஹஜ் செய்து வந்தனர்.
தங்களின் முப்பாட்டனார்களாகிய இப்ராஹிம், இஸ்மாயில் பாரம்பரிய செயல்களை நிலைபெறச் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்து வருகின்றனர்.தன் நேசத்துக்குரிய புதல்வர் இஸ்மாயிலை பலியிடுவதற்கு தயாரான இப்ராஹிம் நபி வரலாறு அனைவருக்கும் தெரியும். அதற்கு சான்றாக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் அன்று உள்ஹியத் பலியிடுகின்றனர். நாம் நேசிக்கும் எதையும் இறைவனுக்காக பலியிடத் தயார் என்பதை தெளிவுபடுத்துவது இதன் நோக்கம்.
முஸ்லிம்களின் சமத்துவ சித்தாந்தத்தை பிரகடனம் செய்கிறது ஹஜ். எல்லா நற்குணங்களையும் தங்களுக்குள் வளர ஊக்குவிக்கிறது. பல்வேறு இனம், நிறம், மொழி, பண்பாடு கொண்ட மக்கள் ஒரே விதமான ஆடை அணிந்து, ஒரே செயல்களைச் செய்கின்றனர். எளிய வெள்ளை ஆடைகளை உடுத்தி மேற்போர்வை மட்டும் அணிந்திருப்பர். இந்த பிரத்யேக ஆடைக்கு இஹ்ராம் என்று பெயர். இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை இது காட்டுகிறது.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவை முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கும் கூட்டமைப்பு உணர்வை பலப்படுத்துகின்றன. ஹஜ் செய்பவர்கள் புதிதாக பிறந்த குழந்தைகளை போன்றவர்கள் என்கிறார் நாயகம். பிறந்த குழந்தை எந்த பாவமும் செய்யாதிருக்காதல்லவா? உண்மையை உணர்ந்த பின் தீமையைச் செய்ய இயலாது என்பது தான் இதன் பொருள். ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டும் பரிகாரம் தேடுகின்றனர்.ஆனா மூனா சுல்தான்,பாரம்பரிய வரலாற்று ஆர்வலர்,கீழக்கரை, ராமநாதபுரம்.