பதிவு செய்த நாள்
21
ஜூலை
2021
01:07
தில்ரஸ் பானு ஆலாபித்தாள். “என் அன்புக்குரிய அக்காள் மகளே! இங்கே வா!” தில்ரஸுக்கு வயது 40. பத்து வயது இரட்டைக் குழந்தைகளுக்கு தாய். முதுகலை அரபி படித்தவள். இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவள். கணவன் குவைத்தில் பணிபுரிகிறான்.இவளோ தன் இரட்டை குழந்தைகளுடன் கோத்தகிரியில் வசிக்கிறாள்.
வீட்டுவாசலில் பெண்களுக்கான ஆடையகம் நடத்துகிறாள்.தில்ரஸ் பானுவுடன் துணைக்கு அவளின் அக்காள் மகள் தவுலத்துல் கதீரா இருக்கிறாள். வயது 20. ஆலிமா பட்டம் பெற்றவள். “வந்தேன்... என்ன விஷயம் சாச்சி?”“நீ எனக்கு மகள் முறை என்றாலும் எனக்கொரு அம்மாவாக இருந்து என்னை வழி நடத்துகிறாய். என்னைவிட அறிவாளி நீ, மார்க்க விஷயங்களிலும் நீ எனக்கு ஒரு குரு!”“சும்மா இரு சாச்சி. உன்னிடமிருந்து நானும், என்னிடமிருந்து நீயும் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம் என்பதே உண்மை!”
“ஆன்மிகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக பிரகாசிக்க முடியுமா?”“ஏன் முடியாது? ”“ஆண்களில், ஆண்- - பெண் என்கிற வித்தியாசம் எல்லாம் கிடையவே கிடையாது என்கிறார் குபி அத்தார். பெண் என்பவள் இறைவனின் படைப்பிலேயே பரிபூரண அழகை வெளிபடுத்துபவள். அவள் படைக்கப்பட்டவள் அல்ல, படைப்பவள் சாச்சி. பெண், இறைவனின் வெளிச்சம்!
”“அப்படியா சொல்கிறாய்?”“இறைவனின் திருப்பெயர்களான ரஹ்மான், ரஹீம் என்கிற இரு பெயர்களும் பெண்ணின் கருவறை என்கிற வேர்ச் சொல்லிலிருந்து வந்தவை சாச்சி! ”“ஓவ்!”“மரணம் வரும் முன்பே மரணித்து முடிக்கிற தகுதி பெண்களுக்கு உண்டு சாச்சி! ”“பெரிய பெரிய வார்த்தை எல்லாம் கூறுகிறாய் தவுலத்.
எனக்கொரு ஆசை நிறைவேற்ற முடியுமா என்பதை நீதான் கூற வேண்டும்!”“என்ன ஆசை சாச்சி!”“நாற்பது நாட்கள் எவர் கலப்பற்ற மனதுடன் அல்லாஹ்வை தியானிக்கிறாரோ அவருடைய மனதிலிருந்து ஞானத்தின் ஊற்று, நா வழியாக வெளியாகும் -என மார்க்க நுாலில் படித்தேன். நீயும் நானும் 40 நாட்கள் அல்லாஹ்வை தியானித்து ஞானத்தின் ஊற்று நம்மிடம் பீரிட காண்போமா?
”நிலாவினாள் தவுலத்துல் கதீரா.“ஹிந்து மதத்தில் இல்லறத்தை துறந்து துறவறம் பூண்டு ஆன்மிக ஞானம் பெறுகின்றனர். ஆன்மிக ஞானம் பெறுவோரை இந்துமதம் யோகிகள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் என கொண்டாடுகிறது. இஸ்லாம் மதத்தில் ஞானம் பெற்றவர்களை சூபிகள், ஷெய்க், சர்க்கார், பாவா, வாப்பா என அழைக்கின்றனர். இலங்கையில் இஸ்லாமிய ஞானிகளை பாவாங்கள் என விளிக்கின்றனர்.
என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜா தானே?”“சரியாக சொன்னாய் செல்லம்!”“கி.பி.,717ல் ஈராக்கில் ராபியத்துல் பஸரியா என்கிற சூபி பிறந்தார். அவர் தான் இஸ்லாமின் முதல் பெண் சூபி. அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரைப் போல நாமும் ஆக முயற்சிப்போம் சேச்சி!”“முடியுமா தவுலத்?
”“ஒரு முஸ்லிம் பெண்ணை பார்த்து நீ ஒரு ராபியத்துல் பஸரியா என்று சொல்லி விட்டால் இந்த உலகில் இருக்கும் எல்லா விருதுகளும் கிடைத்து விட்டது போல் அந்த பெண் மகிழ்வாள். இவ்வளவுக்கும் ராபியா பற்றி அவளுக்கு அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம். முஸ்லிம் பெண்களிடம் மிக உயர்ந்த இடம் ராபியத்துல் பஸரியாவுக்கு இருக்கிறது!
”“ராபியத்துல் பஸரியா பற்றி மேலும் சொல் தவுலத்”“ராபியா, 100 பெண்களுக்கு மேலானவர். வேதனையை உடுத்தி தலை முதல் கால்வரை உண்மையில் மூழ்கியவர். இறைவனின் பிரகாசத்தில் அழிந்து போனவர் என்கிறார் சூபி அத்தார்!”“ஓஹ்!
”“ஒரு முறை ஹஸன் பஸரி (ரஹ்) சொற்பொழிவு செய்ய ராபியாவுக்காக காத்திருக்கிறார். அந்த கிழவிக்காகவா காத்திருக்கிறீர்கள். நாங்கள் போதாதா என்கின்றனர் கூட்டத்தினர். யானைகள் குடிப்பதற்கான பானத்தை நான் எப்படி எறும்புகளின் பாத்திரத்தில் ஊற்றி நிரப்புவது? என பதிலளித்தார் ஹஸன் பஸரி!”“டெரிபிக் தவுலத்!
”“ராபியாவை இரண்டாம் மரியம் எனலாம். ஒரு முறை ராபியாவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு அணுகுகிறார் ஹஸன் பஸரி. அப்போது ராபியத்துல் பஸரியா ஹஸனை பார்த்து கேட்கிறார்.பொதுவாக ஆணுக்கு அறிவு எத்தனை பங்கு, பெண்ணுக்கு அறிவு எத்தனை பங்கு? ஹஸன் இறுமாப்பாய் பதிலளிக்கிறார்.
ஆணுக்கு அறிவு ஒன்பது பங்கு, ஆசை ஒரு பங்கு பெண்ணுக்கு அறிவு ஒரு பங்கு, ஆசை ஒன்பது பங்கு! - உடனே ராபியா ஒன்பது பங்கு ஆசையுள்ள பெண்கள் அதனை அடக்கி ஆளும்போது, ஒரு பங்கு ஆசையுள்ள ஆணால் அதனை அடக்கி ஆள முடியாதா? என கேட்க ஹஸன் திரும்பி போய் விட்டார்!”“ராபியா மலை என்றால் நாம் மடு மகளே!”“முயன்றால் நாமும் மலையாகலாம் சாச்சி. சூடானில் நோய்கள் தீர்ப்பதில் வல்ல ஷெய்கா எனும் சூபி பெண் குருமார் இருக்கின்றனர்.
நாமும் ஷெய்கா ஆவோம் சாச்சி. பாத்திமா நிஷாபூரி போல, மூமினா காத்துன் போல நாமும் ஆன்மிக தென்றல் ஆக முடியும். இஸ்லாமின் ஆழ்பரிமாணம் தான் சூபியிஸம். ஆன்மிகத்தின் வெகு ஆழத்தே நீந்துவோம்.இறைவனை பார்க்க முயற்சிப்போம், பார்க்க முடியாவிட்டால் இறைவன் நம்மை பார்க்கட்டும். இறைவழிபாட்டில் பரிபூரணத்தை எட்ட முயற்சிப்போம் சாச்சி!”“ஞானத்தின் ஊற்று பீரிட என்ன செய்யலாம் தவுலத்?
”“இன்று இரவிலிருந்து நாற்பது நாட்களுக்கு நபில் நோன்பு வைப்போம். மூன்றில் ஒரு பங்கு வயிறு நிறைய உணவருந்தி சஹர் வைப்போம். ஒரு டம்ளர் நோன்பு கஞ்சியும், இரண்டு பேரீச்சம் பழங்களும் வைத்து நோன்பு திறப்போம். உணவின் மீதான ஆசையை வேரறுப்போம்.. மாமிசம் விரும்பி தின்பதை குறைப்போம்.”“சரி மகளே!”“தினம் ஐந்து வேளையுடன் நள்ளிரவு தொழுகை தஹஜத்தையும் விடாமல் தொழுவோம்.
நமக்கு தீங்கு செய்தவர்களின் மீதான பழிவாங்கும் எண்ணத்தை தலைமுழுகுவோம்! ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்தும், சதகாவும் கொடுப்போம். தொழும் நேரம் போக மீதி நேரங்களில் இறைவனின் நாமங்களை திக்ர் எடுப்போம். தஸ்பீஹ் மணிமாலையை கைவிரல்கள் ஓயும் வரை உருட்டுவோம்!”“கட்டாயம்!”“தினம் மூன்று வேளை குர்ஆன் ஓதுவோம்! நாம் குர்ஆன் ஓதும் இனிமையை ரசிக்க மலக்குகள் நம்மை சுற்றி நிற்கட்டும்!
”“நிற்கட்டும் நிற்கட்டும்!”“உலக மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் துஆ செய்வோம். தினம் இருவேளை குளிப்போம். கை, கால் விரல் நகங்களை கத்தரித்து அழகு படுத்துவோம்.பற்களை மிஸ்வாக் செய்வோ. நம் குழந்தைகளுக்கும் அக்கம்பக்கத்து இஸ்லாமிய குழந்தைகளுக்கும், குர்ஆன் ஓத கற்று தருவோம்.கண்களுக்கு சுருமா ஈஷுவோம். நாள் முழுக்க சலவாத்து ஓதுவோம்... அக்கம் பக்கத்தினருடன் தேவையற்ற உரையாடல்களை தவிர்த்து விழித்திருக்கும் நேரமெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபடுவோம். நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களை வாசிப்போம்.
மாற்று மத சகோதரர்களுடன் இணக்கமாக இருப்போம்...”“எல்லாம் சரி என் இரட்டைக் குழந்தைகளை யார் கவனிப்பது?”“மேட்டுப்பாளையத்தில் இருக்கும் நம் உறவினர் வீட்டில் விட்டுவருவோம்!”“என் கணவரிடம் அனுமதி கேட்க வேண்டாமா?”“அனுமதி வேண்டாம்... தகவல் மட்டும் சொல்லு சாச்சி!” “இறைவணக்கங்களின் இடையே குணங்குடி மஸ்தான் பாடல்களை பாடுவோமா?”“பாடுவோம்!”“நாகூர் அனிபா பாடல்கள்?”“இம்!
”தில்ரஸ் பானுவும், தவுலத்துல் கதீராவும் தங்கள் நாற்பது நாள் ஞான வேள்வியை துவக்கினர். உடல் இச்சை, கோபம், குரோதம், துாக்கம், உணவு, களவு, ஆசை, சுயநலம், கோள் பேசுதல் அனைத்தையும் விருப்பமாக துறந்தனர்.முதலிரு நாட்கள் சிரமமாக இருந்தன. அதன்பின் இரு பெண்களுக்கும், இறைவனுக்கும் இடையே ஆன அலைவரிசைகள் இணைந்தன.இரு ஆன்மாக்களும் இறைவனின் மீது காதலாகி கசிந்துருகின. இத்தனை நாள் சிங்கத்தின் மீது மாவு பொதியை ஏற்றி கழுதை போல் மனதை பயன்படுத்தி வந்தது புலனானது. திருமறையில் வசனங்களின் உள்ளர்த்தங்கள் முழுதும் புரிந்தன. ரோஜாக்களும், மல்லிகைகளும் இடப்பட்ட மரகத ஆன்மிக பாதையில் இரண்டு பெண்களும் நடந்தனர்.நாற்பது நாட்கள் நிறைவுற்றன.
இரண்டு பெண்களும் பிஞ்சாகி, காயாகி எலுமிச்சையாய் தங்கமஞ்சள் நிறத்தில் கனிந்து ஆன்மிகத்தில் பூரணத்துவம் பெற்றனர்.“மகளே! நமக்கு ஞானம் வந்து விட்டதை எப்படி உறுதி செய்வது?”“முட்டைகளை அடை வைத்துவிட்டு குஞ்சு வெளிவருகிறதா என முட்டையை உடைத்து பார்க்கக் கூடாது சாச்சி!”“இருபத்தியோரு நாட்களுக்கு பிறகும் குஞ்சு வெளிவராவிட்டால் முட்டையின் விரிசலை அதிகப்படுத்தி குஞ்சு வெளிவர வழிவகை செய்யலாம் மகளே!”“சரி சொல்லு... கொரோனாவிலிருந்து மக்கள் எப்போது முழுமையாக விடுபடுவர் சாச்சி?”“2021 டிசம்பர் 31க்கு பிறகு உலகத்தில் ஒரு மனிதரும் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள் மகளே!
”இரண்டு பெண்களின் மனங்களிலிருந்து பீரிட்ட ஞான ஊற்று பூமியை முழுக்க நனைத்தது. இரண்டு பெண்களின் கண்களில் சூரியத்துண்டுகள் பிரகாசித்து, ஜாஜ்வல்யம் பண்ணின. இருவரின் நிழல்களில் ராபியத் பஸரியாவின் நிழல் சங்கமித்தது.“நாற்பது நாள் பூட்டின வீட்டுக்குள்ள சின்னம்மாகாரியும், மகளும் ஓதுரேன் தொழுகுகிறேன்னு விழுந்துவிழுந்து ஈடுபட்டு அரை கிறுக்காகிட்டாளுக!” என முணுமுணுத்தனர் அக்கம் பக்கத்தினர்.
நிச்சயமாக எங்கள் வணக்கங்களும், தியாகங்களும், வாழ்வும், மரணமும் அல்லாஹ்வுக்காக வேண்டியே இருக்கும்!” இரு அக்னி குஞ்சுகளின் உதடுகள் முணுமுணுத்தன.“அப்பழுக்கற்ற மனதுடன் முழு அர்ப்பணிப்பாக ஞானத்தை ஒரு யுகமல்ல, ஒரு நொடி தேடினால் கூட அள்ளி அள்ளி கொடுப்பேன் நான்!” எனக் கூறி விகசித்தான் இறைவன்
.-_ ஆர்னிகா நாசர்