திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்களை மிரட்டும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் பூஜைக்காக கொண்டு வரும் தேங்காய், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களை கண்டதும், மலைக்கோவிலில் சுற்றித் திரியும் குரங்குகள் ஓடி வந்து பக்தர்களிடம் அதை பறித்து செல்கின்றன.பக்தர்கள் தர மறுக்கும்போது குரங்குகள் கடிக்க முயல்கின்றன. இதனால், பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, கோவில் நிர்வாகம், மலையில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என, திருத்தணி வனத்துறையினருக்கு கடிதம் எழுதி பரிந்துரை செய்தது.அதை தொடர்ந்து, நேற்று, திருத்தணி வனத்துறை அதிகாரி அருள்நாதன் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், இரண்டு கூண்டுகளை, மலைக்கோவிலில் வைத்தனர்.இதில், 13 குரங்குகள் சிக்கின. இந்த குரங்குகள், தமிழக - ஆந்திர எல்லை வனப்பகுதியில் விடப்பட்டன.திருத்தணி வனத்துறை அதிகாரி அருள்நாதன் கூறுகையில், தொடர்ந்து கூண்டுகள் வைத்தால் குரங்குகள் சிக்காது. ஆகையால், 10 நாட்களுக்கு ஒரு முறை பிடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.