பதிவு செய்த நாள்
22
ஜூலை
2021
04:07
திருபுவனை-திருவாண்டார்கோயில் சுதானா நகரில், பொது இடத்தில் உள்ள பிள்ளையார் சிலையை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி திருவாண்டார்கோயில் சுதானா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு மனைகள் பிரிக்கப்பட்டபோது, மக்கள் பயன்பெறும் வகையில் பொது இடம் ஒதுக்கப் பட்டது. அந்த இடத்தில் பிள்ளையார் சிலை நிறுவி, வழிபட்டு வருகின்றனர்.இந்தநிலையில், வேறொரு சமூகத்தினர் கொடுத்த புகாரின்பேரில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, அங்குள்ள வினாயகர் சிலையை அகற்ற, துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சிலையை அகற்றுவது தொடர்பாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், வில்லியனுார் தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இதை அறிந்த சுதானா நகர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர், நேற்று பகல் 12.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விநாயகர் சிலையை அகற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மறியலால், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்களுக்கும்-போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.