பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
01:07
போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் மூலம் திண்டுக்கல் அருகே சித்தையன் கோட்டையில் கி.பி.11, 12ம் நுாற்றாண்டை சார்ந்த மூத்த தேவி எனும் தவ்வை சிற்பம் கண்டெடுத்தனர். பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: பேராசிரியர் கருப்பசாமி தலைமையில் ஆய்வு மாணவர் ராம்குமார், நெல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா உள்ளிட்ட வரலாற்று தேடல் குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகே அழகர்நாயக்கன்பட்டி பகுதியில் ஆய்வு செய்தோம்.
கொம்பங்கரடு சலப்பு வாய்க்கால் நீர் ஓடையில் கி.பி.11,12 ம் நுாற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி எனும் தவ்வை சிற்பம் இருப்பது தெரிந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் இப்பகுதி ஆற்றுார் நாட்டு பிரிவின் கீழ், எரிவீரதளம் எனும் வணிக நகரமாக செயல்பட்டுள்ளது.திரிபங்க கோலம்மூத்ததேவி மனித உடலும், விவசாயிகள் உழவுப்பணிக்கு பயன்படுத்தப்படும் காளை மாட்டின் தலை அமைப்பும் உடைய தனது மகனான மாந்தன், மகளான மாந்தியுடன் புடைப்பு சிற்பமாக பலகைக் கல்லில் வடிவமைத்துள்ளனர். மூத்த தேவிக்கு வலப்பக்கமுள்ள மாந்தன் உடலை மூன்றாக வளைத்து நிற்கும் திரிபங்க கோலத்தில் நின்றுள்ளார். வலது கையில் ஒரு தடியை பிடித்தும், இடது கையில் உருண்டையான ஒரு பொருளை பிடித்த படியும் உள்ளார். இடப்பக்கம் மாந்தி தனது வலது கையில் தாமரை மொட்டு ஒன்றை பிடித்தும், இடது கையை இடது இடைப்பகுதியில் வைத்து அமர்ந்து, தலைப்பகுதி உடைந்துள்ள சிற்பமாக காட்சியளிக்கிறார்.இருவருக்கும் நடுவில் தவ்வை என குறிப்பிடும் மூத்ததேவி தனது இரு கால்களையும் விரித்து மடித்து அமர்ந்தது போன்று உள்ளார். இடது கையை இடது தொடையில் அமர்த்தியபடி உள்ளார்.கிரீடம், மகுடம் பாதி உடைந்தும், காதுகளில் குண்டலங்கள் உள்ளன.குலதெய்வம்தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது திருமகளுக்கு முன்னர் தோன்றியவளே மூத்ததேவி. இவர் பல்லவர் காலத்தில் மக்களின் முக்கிய வழிபாட்டு தெய்வாகவும், பல்லவ மன்னனான நந்திவர்மனின் குல தெய்வமாகவும் வழிபடப்பட்டவராகவும் இருந்துள்ளார். இப்பகுதியில் விவசாயிகள் மூத்ததேவி சிற்பத்தை தங்களது விளை நிலங்கள், பயிர்களை காக்கும் தெய்வமாக கருதி வணங்கி வருகின்றனர், என்றார்.