சதுர்வேதமங்கலம்: சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஊராட்சிக்குட்பட்ட தேனம்மாள்பட்டியில் கோயில் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இங்குள்ள மந்தையம்மன் கோயிலில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மட்டும் பூஜை நடப்பது வழக்கம். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அவ்வழியாகச் சென்ற வெள்ளைச்சாமி என்பவர் கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தார். அம்மன் சன்னதியில் இருந்த உண்டியலை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரிந்தது. உண்டியலில் நான்காயிரம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் சதுர்வேதமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். ஏற்கனவே எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டி, மகிபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோயில் உண்டியல்கள் தொடர்ச்சியாக திருடுபோயுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.