ஆடி அமாவாசை ராமேஸ்வரம் கோவில் மூடல் : சமூக தளத்தில் வைரல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2021 03:07
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோவில் மூட உள்ளது என சமூக வலைதளத்தில் பரவும் தகவலுக்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆக.,8ல் ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி கடலில் நீராட ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனை தடுக்க ஆக. 7, 8ல் கோவில் மூடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்ததாக சமூக வலை தளத்தில் செய்தி வைரலாகியது. இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொது செயலர் ராமமூர்த்தி கூறுகையில் : சமீபத்தில் நடந்த பிற மத வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்களை அனுமதித்தது போல், ராமேஸ்வரம் கோவிலில் நடக்கவுள்ள ஆடி திருவிழாவுக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும் ஆடி அமாவாசை அன்று கோவில் நடை சாத்தப்படும் என சமூக வலைதளத்தில் வைரலாகும் செய்திக்கு, கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவிக்காதது வேதனைக்குரியது. ஆடி அமாவாசையில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்க கூடாது. வழிகாட்டு நெறிமுறைகள் படி பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி கோவிலில் தரிசிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.