பதிவு செய்த நாள்
30
ஜூலை
2021
04:07
மேட்டுப்பாளையம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் உள்ள கோவில்களில், அம்மன் சுவாமிக்கு, அலங்கார சிறப்பு பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பூஜை நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு, மாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறுமுகை சாலை, பழைய சந்தை கடை பகுதியில், மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலையில், 6:00 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன், அம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இதேபோன்று மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் சுவாமிக்கு, சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.