பதிவு செய்த நாள்
02
ஆக
2021
09:08
வடவள்ளி: மருதமலை மற்றும் பேரூர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று ஆடிக்கிருத்திகை, நாளை ஆடிப்பெருக்கு, வரும், 8ம் தேதி ஆடி அம்மாவாசை ஆகிய விசேஷ நாட்கள் வருகிறது. இதனால், கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நேற்று முதல் நாளை (3ம் தேதி) வரையும், வரும், 8ம் தேதியும், இந்த நான்கு கோவில்களில், பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தனர். அப்போது, அடிவாரத்தில் உள்ள மலைக்கு செல்லும் பாதையின் கேட் அடைக்கப்பட்டு, தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்த, பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பக்தர்கள் அடிவாரத்திலுள்ள படிக்கட்டு பாதை கேட் முன்பு, விளக்கு ஏற்றி வழிபட்டு சென்றனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப் படாததால், கோவில் முன் மற்றும் படித்துறை விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தி சென்றனர்.