பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில், கோவில் கும்பாபிஷேகம் நடத்தாததால், உண்டியல் காணிக்கையை எண்ண விடாமல் பக்தர்கள் தடுத்து, அதிகாரிகளை திரும்பியனுப்பினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பழம்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை வைத்தும் நடத்தவில்லை. நேற்று முன்தினம், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியை துவக்கினர். அங்கு வந்த பக்தர்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், அதனால் உண்டியல் காணிக்கையை எடுத்து செல்லக்கூடாது. காணிக்கையை மீண்டும் உண்டியலில் செலுத்தக் கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் உண்டியல் பணத்தை எண்ணாமல், உண்டியலை மீண்டும் கோவிலுக்குள் வைத்துவிட்டு திரும்பினர்.