சேலம்: தமிழில் அர்ச்சனை செய்ய, சுகவனேஸ்வரர் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவிலில், முதல்கட்டமாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. அதன்படி, சேலம் மண்டலத்தில் சுகவனேஸ்வரர் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. அதன் உப கோவில்களான ராஜகணபதி, காசி விஸ்வநாதர் கோவில்களிலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும். இந்த கோவில்களில், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தை அரசு தொடங்கும்போது, சேலத்தில் பின்பற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.