பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடி அமாவாசையையொட்டி, நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவிட் தொற்று காரணமாக, பெரிய கோவில்களில், பக்தர்கள் நுழைய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சிறிய அளவிலான அம்மன் கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீ பால விநாயகர் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆயுஷ் ஹோமம் நடந்தது. விழாவையொட்டி, ராஜராஜேஸ்வரி அம்மன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல அப்புலுபாளையம் மாகாளியம்மன் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.