ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்த பெரியாழ்வார் ஆடிப்பூர நன்னாளில் துளசிச்செடியின் அடியில் தெய்வக் குழந்தை கிடப்பதைக் கண்டார். அவளுக்கு கோதை என பெயரிட்டு வளர்த்தார். தந்தையிடம் கண்ணனின் வரலாறு கேட்டு மகிழ்ந்த கோதை, பருவவயதில் அவன் மீது கொண்ட காதலால் கண்ணனை நினைக்காத நாளில்லையே என வாழ்ந்தாள்.
தினமும் பூமாலையை தன் கூந்தலில் சூடி, கண்ணனுக்கு தான் பொருத்தமானவளா என மனதிற்குள் மகிழ்ந்தாள். சூடிய மாலையைக் களைந்து பெரியாழ்வாரிடம் பூஜைக்கு கொடுத்து வந்தாள். ஒருநாள் பெரியாழ்வார் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அதிர்ந்தார். வேறொரு மாலையை சூட்டி வழிபட்டார். ஆனால் கோதையின் மாலையே தனக்கு விருப்பமானது என சுவாமி தெரிவித்தார். இதன் பின் கண்ணனின் மனதை ஆள்பவள் என்னும் பொருளில் ஆண்டாள் என பெயர் பெற்றாள் கோதை. ஆழ்வாரும் மகளை மானிடருக்கு திருமணம் முடிக்காமல் காத்திருந்தார். தமது இருப்பிடமான ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டாளை அழைத்து வரும் படி பெரியாழ்வாரிடம் சுவாமி உத்தரவிட்டார். அங்கு ஆண்டாள் ரங்கநாதருடன் இரண்டறக் கலந்தாள். ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ரங்கமன்னாருடன் மணக்கோலத்தில் அருளாட்சி புரியும் ஆண்டாளின் திருவடிகளை போற்றுவோம்.