பெயரளவில் குற்றாலநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்: பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2021 03:08
குற்றாலம்: குற்றாலநாதர் கோயிலில் பெயரளவில் வருஷாபிஷேகம் நடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பஞ்ச சபைகளில் சித்திரசபை இடம் பெற்றுள்ள கோயிலாக திருக்குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயினருவி அருகில் அமைந்துள்ள குற்றாலநாதர்- குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. குற்றாலநாதர் கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. இந்தாண்டு ௧௧வது வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு கும்ப பூஜைஉள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுவதற்கு பதில், விமானத்தில் இருந்த சிற்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பொதுவாக மகா கும்பாபிஷேகம் என்றாலும், அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வருஷாபிஷேகம் என்றாலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புனிதநீர் விமானத்தில் உள்ள கலசங்களுக்கு தான் ஊற்றப்படுவது உண்டு. ஆனால் நேற்று நடந்த குற்றாலநாதர் கோயில் வருஷாபிஷேக நிகழ்ச்சிக்காக புனிதநீர் ஊற்றுவதற்கு விமானத்திற்கு செல்ல சாரம் எதுவும் கட்டப்படவில்லை. விமானத்திற்கு பதில் சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தாண்டு ஆகம விதிப்படி குற்றாலநாதர் கோயலில் வருஷாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள், சிவனடியார்கள் புலம்பினர்.