பதிவு செய்த நாள்
31
ஆக
2021
02:08
பல்லடம்: பல்லடம் வட்டார பெருமாள் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஆவணி மாதம், அஷ்டமி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்ததால், இந்துக்கள் அதை கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நேற்று விழா நாடு முழுவதும் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களிலும், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் ஶ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. கரி வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், சாமளாபுரம் அருகே கள்ளப்பாளையம் வேணுகோபால சுவாமி கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, ஸ்ரீசத்யபாமா ருக்மணி சமேதரராக வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை ஊஞ்சல் சேவை, பஜனை, மற்றும் உறியடி உள்ளிட்டவையும் நடந்தன. இதேபோல், வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு பெருமாள் கோவில்களிலும், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, யாரும் விமரிசையாக கொண்டாடவில்லை.