Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகிலத்திரட்டு அம்மானை பகுதி-2 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-4 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-4
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-3
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்
இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும்
அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம்
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை
கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்ச லருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்

ருக்மணி கல்யாணம்

வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை
மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க
நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை
விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்குத்
திருமாங் கலியம் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோ னடிபணிந்து
இப்போது வுன்றனக்கு இசைந்த உருப்பிணியைப்
பாணிக் கிரணம் பண்ணப் பறையடித்தார்
நானிதையுங் கேட்டுநாடியுரைத்தே னென்றார்
அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிந்து போக இசைந்தார்கா ணம்மானை 20

மோகத்திரு மாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தா லுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுடக்
கழுத்திலே யிட்டுக் காமக்கண் ணீட்டிடவே
மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேயமெங்கும் மோகம் சென்றதுகா ணம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து
உருப்பிணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு
விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி
மனோன்மணியை யுங்கூட்டி மாயன் படையுடனே
வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து
வடவெல்லாந் தீர்த்து வைகுண்டப் பெம்மானும்
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை

ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய்
அருந்தி முறைமா தரையணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும்
திருக்கி யறுத்து அசுரரையும்
உபாய முடனே கொலையடக்கி
உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத்
துவரம் பதியிலி ருந்தளரே 40

உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்

பாண்டவர் வரலாறு

கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து
அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
எவரெவரு மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை
வளர்ந்து நிமிர்ந்து வரும்வேளை யானதிலே
இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
துடியாய் மனுவழக்குச் சொல்லித்துரி யோதனனும்
முடிய வினைசூடி உலகாண்டா னம்மானை
பாவி யிருந்து பாராண்டச் சீமையிலே
கோவுகட்கு  நீர் குடிக்கக் கிடையாது
தன்ம ரவ்வீமன் சகாதே வன்விசயன்
நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான்
குருநா டெனவே கூறுவா ரந்நகரு
திருநாடு தன்னுடைய சிறப்புக்கே ளம்மானை
துரியா தனாதி செலுத்துமஸ்தி னாபுரத்தில்
பரியொட் டகமும் பலிமிருக மானதுவும் 60

பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசியாய்க் குருநகரில் மேவித்தகை யாறிவரும்
அத்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம்
பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும்
குருநாடு தன்னில் குழாங்கொண் டிருந்தனராம்
திருநாட்டுக் கொவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசமா யுள்ள வெகுவைந் தலையரவும்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு
அந்நாடு நாடு அரன்நாட்டுக் கீடாகும்
பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு
அரனருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு
இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு
தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில் 80

மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பேர்பாதி யாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காகத்
தாண்டவ ராயர் தண்மையா லம்மானை

பாண்டவர் வனவாசம்

இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடியுடைய மன்னன்துரி யோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை
தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்ததான்
நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்று மில்லாமல்
இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும்
தனியே வனத்தில் தானனுப்பி இராச்சயத்தை
அடக்கி யரசாள அவன்நினைத்து மாபாபி
உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும்
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைத் தான்விரட்டி
சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான்
வனவாசந் தன்னில் வந்திருந் தைபேரும்
இனமா னதுபோல் இருந்தார் குகையதிலே
அப்போது வேத வியாச ரவறிந்து 
செப்போடு வொத்தத் திருமா லருகேகி           100

மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீயதுரி யோதனனைச் செயிக்கவந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுதுசூ தாடிவென்று
வஞ்சக மாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான்
ஐபேரும் பத்தினியும் அன்னை பிதாவுடனே
பைப்போ லலறிப் பசித்திருந்து வாடுகிறார்
அன்றுமகா மேர்வில் அடியே னுரைத்தபடி
இன்றுபா ரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும்
அன்று திருமால் ஐவ ரிடம்நடந்தார்
வேத வியாகரரும் வேயூதும் வாயானும்
சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர்கா ணம்மானை
நாரா யணர்வரவே நல்லதர் மாதிகளும்
பாரா னதையளந்தோன் பதம்பூண்டா ரம்மானை
கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே
மால்பிடித்துத் தர்மரையும் மார்போ டுறவணைத்துப்
பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார்
அப்போது தர்மம் அச்சுதரை யும்போற்றி
இப்பெழுது எங்களுக்கு ஏற்ற பசிதீர 120

சூரிய பாண்டம் தனையழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்ன மருளுமென்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும்
கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுத்து
ஐயா யிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும்
என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பே ரரியை எடுத்ததி லிட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்
இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு
சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை
மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயின்பின்
தூயவியா கரரும் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல்
தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று
ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும் 140

ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே
நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான்
அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை
பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி
நீதாள மான நெடியோ னதுகாத்தார்
கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும்
கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே
அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான்
விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே
தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும்
மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார்
பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி
நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே
இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம்
அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும்
பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும்
சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை

துரியோதனன் பாடு

பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு 160

மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத்
தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல்
தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு
வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான்
மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி
ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள்
கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும்
மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும்
தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து
வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து
வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத்
தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து
நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப்
புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச்
செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிட வொன்று ஒத்துதே பாரதப்போர்
ஐபேருட படையும் அரவக்கொடி யோன்படையும் 180

கைப்போரு விற்போரும் கணைப்போரும் வாள்போரும்
அம்புப்போ ருங்கரியின் அச்சுப்போரும் பொருது
கன்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும்
மன்னன் சிறுபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
சராசந் தன்வரையும் சத்தியக் கீசகனும்
பூராச வீமன் பெலியிட்டா னம்மானை
இத்தனைப்பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனைபே ரையும் அறுத்தா னருச்சுனனும்
துரியோ தனன்படைகள் சேர மடிந்தபின்பு
விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
வம்பி லிறந்தாச்சே வாழ்வெதே னென்றுசொல்லி
எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம்
வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே
விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்ச்சுனனை
இன்றுகொல்ல வென்று எழுந்தான் படைக்கெனவே
அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்து
இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ
அத்தினா இன்றுன்மேல் அரவக் கொடியோனும் 200

வாறான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா
வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா
என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு
வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
வீமனுட தண்டதுக்கு விசைமால் விசைகொடுத்துப்
போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
விசையன் பரிநகுலன் வெற்றிச்சகா தேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லமென்று
வீமனை யுங்கூட்டி வெளியிலரி வந்திடவே
காமக் கனல்மீறிக் கரியோ னெழுந்ததுபோல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சந்தான மான தமிழ்வீமன் தான்மாறி
எதிர்த்தா ரிருவர் எனக்கெனக் கென்றேதான்
செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை
மண்விண் ணதிரும் வானமது தானதிரும்
திண்திண் ணெனப்பூமி தொந்தொ மெனக்குலுங்கும்
மலைக ளசைந்து மடமடென ஓசையிடும் 220

கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சுவறி அங்குமிங் கோடிடவே
இலைக ளுதிர்ந்து இடிந்துவிழு மாமரங்கள்
தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாம லேமறைக்கும்
வேöழுழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
தவமுனிவர் நெட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து
திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே
வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்த மோதும் நன்மறையோர் தாம்பதற
துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும்
எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
ஒண்ணுக்கு வொண்ணு ஒல்கிப்புறஞ் சாயாமல்
மண்ணும்விண் ணுமதிர மண்டி யுத்தமிட்டார்
துரியோ தனனடிக்கத் துடிவீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறிய வனடிக்க
அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டுச்
சாயா விதத்தைத் தானறிந் திருபேரும்
வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
துட்டாள னான துரியோதன னுரைப்பான் 240

இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டுப்
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே
உன்பெலமு முன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால்
என்பெலமு முன்னோடே இயம்புகிறே னென்றுரைத்தான்
அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும்
தப்பாமல் தானுரைத்தான் சகலோ ரறிந்திடவே
கேட்டுத்துரி யோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
தீட்டுகிறே னென்னிடது செய்யபுற மென்றுரைத்தான்
கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு
மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
திடத்த முடனே சென்றவ் வீமன்பேரில்
மாறி யவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தை தனில்நினைக்கத்
திலர்தமுள்ள மாயன் செயவீ மனைநோக்கி
வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே
அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே
துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து 260

மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே
அப்போது மாயன் அரவக்கொடி யோனிடத்தில்
தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப் போயினரே
முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய்
தென்ன னிராவணனாய்ச் சிரசுபத்தாய்த் தானிருந்தாய்
அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால்
செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி
பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி
உற்று வொருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில்
தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது
எம்பிரா ணன்வதைக்க ஏலாது என்றனையே
தம்பியொரு நூறோடே தான்படைத் துன்னையுந்தான்
கொம்பிலொரு ஆளைவிட்டுக் கொன்றேனே உன்னையென்றார்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது
தண்டுகொண் டேயடித்த தமிழ்வீ மனல்லாது
இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே
அப்போது மாலும் அதிகக்போ பம்வெகுண்டு
துப்புரைகள் கெட்ட தீயனுக்கங் கேதுரைப்பார்
உன்னையின்ன மிந்த உலகி லொருபிறவி 280

சின்னவன்ன மாகச் சிரசொன்றாய்த் தான்படைத்து
அறிவுபுத்தி யோடும் ஆணுவங்கள் தன்னோடும்
செறியுங் கலையோடும் சிறப்போடுந் தான்படைத்து
என்பேரி லன்பு இருக்கவெகு சாஸ்திரமும்
தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே
முன்னே வுனக்கு உற்றபிறப் பாறதிலும்
என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை
ஏழாம் பிறப்பதிலும் என்னைநினை யாதிருந்தால்
பாழாவாய் மேலும் பகையில்லை யென்றனக்கு
என்று திருமால் இயம்பித்துரி யோதனனை
அன்றவனைக் கொன்று ஐவரையுந் தான்வருத்திக்
கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்தி லுள்ளமுறை
எல்லாச் சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாச முள்ளதர்மர் ஒக்கமுறை செய்தனராம்

கர்ணனுக்கு முத்தியருளல்

முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங் கொடுக்க
மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே
அப்போது வேத வியாசரவ ரங்குவந்து
செப்போடு வொத்த திருமாலோ டேதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட 300

ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய்
பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து
தொண்டுபண்ணி நின்ற துய்யவா னரங்களிலே
வல்லபெல முள்ள வாலியிவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டி லிருக்கையிலே
இராவணனோ டேகூடி இராமசரத் தாலிறந்தான்
சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து
வந்து பணிந்தானே வாலியவ னென்காலில்
நன்றியுள்ள மாலே நானுமுன் னேவலனாய்
முன்னேநீ ரமிழ்தம் உவரிதனிற் கடைய
என்னை யொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனைக்
கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்றந்த வாலி இறைஞ்சிநின்றா னென்னையுமே
அன்றுவா லிதனக்கு அருளினது நீர்கேளும்
எனக்கேவ லாக இப்பிறவி நீபிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால்
இனிமே லவனோடிருந்து என்சொல் கேட்கவைத்துக்        320

கனியான மோஷக் கயிலாச மேதருவேன்
என்றவனை யழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை
அரவக் கொடியோன் இடத்தி லனுப்பிவைத்து
இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி
அன்னை பிதாசொல் அசராம லைபேர்க்கு
ஒன்னே வொருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு
மானமாய் மோக்ஷம் வகுத்தே னிவனுக்கென்றார்
நல்லதுதா னென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான்
எல்லைவைத்தா பாரதப்போர் இன்று முடிந்ததென்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரை யும்போற்றி
மெய்போக மான வியாசரை யுங்குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனா ருண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
வைகுண்ட மேக மனதிலுற்று எம்பெருமாள்
பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி
ஆங்கார மோகத்(து) அம்புக் கணுவாலே 340

ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு
மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
நூல்நடந்து வாருமென்று மோக்ஷத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது
சாரங்கர் செய்த தன்மைகே ளம்மானை

சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும்

அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும்
வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
சோலை மரமும் சுபசோப னமரமும்
ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும்
புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந் தனமரமும்
மாவு பலமரமும் வாய்த்த பலாமரமும்
தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது
சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவை யின்பெருமை
தூல மின்னதென்று சொல்லத் துலையாது
பார்வதியும் ஈஸ்வரனும் பாவித் திருப்பதுபோல் 360

தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
கயிலை யீதென்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உவந்திருப்ப தவ்வனத்தில்
வைகுண்டங் காண வந்ததர்மி யெல்லோரும்
மெய்குண்டங் கண்டோ மெனஇருப்பா ரவ்வனத்தில்
அப்படியே நல்ல அயோக அமிர்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான்
புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காகத்
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம்
அவ்வனத்தி லுள்ள அமிர்தகங்கை யானதிலே
குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார்
மரகத வல்லி வள்ளி சலிகையெனும் 380

சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென
ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று
சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில்
ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி
பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டானம்
இனியெனக்கு நீங்கள் எல்லோரு மிக்கவந்து
கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள்
அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார்
எப்போதுந் தானாய் இருப்பவர்க்கே யல்லாது
மாயவர்க்கு மற்றுமுள்ள மயேசு ரர்தன்றனக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தன்றனக்கும்
எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற
ஒருவனுக்கே யல்லால் ஊழியங்கள் வேறில்லையே
கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும் 400

காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர்
தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம்
ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று
மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில்
சாலோக மான சத்திபர லோகமதில்
ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும்
சீருரூப மான சிவலோக மானதிலே
மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே
தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே
தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில்
சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை
சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு
பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில்
புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு
சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை
இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் 420

அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு
எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக்
கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக்
கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று
தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே
பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி
குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே
காமத் தழலாய்க் கருமேனி யானதிலே
வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய
சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள்
கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி
அரிஓம் எனவே ஆடிக் கரையேறி
தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள்
உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு
அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட
கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே
திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார்
கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ

உன்னித் திருமால் ஓங்கார மோகமதால்
மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை
சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை
தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார்
வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும்
கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி
துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல்
கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை

கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும்
இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே

அம்மைமார் தவம்

கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறி கயிலையுக மானதற்கு  460

அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து
வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை
இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று
பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும்
ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே
மாசொன்று மில்லா மாத ரேழுபேரும்
தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும்
மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை
கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர்
பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார்
பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே
காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும் 480

நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே
அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர்
சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியே னதையெழுதி
மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட் டம்மானை
தன்போத மாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென் றெம்பெருமாள்
உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமா யுரைத்தார்
இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள்
அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க

திருமால் அமுதளித்தல்

பிள்ளை களைப்போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளலந்த மாலும் மதலை தனையெடுத்து
ஆரிடத்தி லிம்மதலை அடைக்கலமாய் வைப்போமென்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றா ரம்மானை
தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும்
கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி 
நிரைவா வெனவே நியமித்தங் கூதிடவே 500

அரை நொடியிலாவு அங்கொன்று மில்லாமல்
அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம்
சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றா ரெம்பெருமாள்
பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு
நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன்
தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே
வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை
இந்தாப்பா ரென்று எறிந்தா ரவன்பயந்து
ஆரோ வெனப்பயந்து அயிராவதத் தோனும்
போரொல்கிப் போனான் பொன்னுலோ கந்தனிலே
நல்லதென மாமுனியும் நளின முடன்மகிழ்ந்து
செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க

காளி வரவு

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி
பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே 520

ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித்
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு
தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில்
கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே
தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட
மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே
பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி
காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக
மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து
வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை
உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து
வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள்
தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே
மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும்
விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப்
படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள்          540

என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே
வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி
கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு
பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி
கண்ணான காளி காரிகையே நீகேளு
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு
விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே
தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன்
விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும்
உன்னை யழைத்து உன்கையி லேதருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப்
பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து
மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக்
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து 560

வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள்
வேத முனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள்
வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து

சான்றோர்க்கு நாமம் அருளல்

உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து
வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து
முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும்
மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து
கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி
குணமான தந்தி குமரனை யும்வருத்தி
சத்தி உமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையும் வானோர் எல்லோரை யும்வருத்தி
சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி
மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர
இப்படியே சங்கம் எல்லோருந் தான்கூடி
அப்படியே தானிருக்க அருளுவா ரச்சுதரும் 580

பிறந்தபிள்ளை யேழதுக்கும் பேரிட வேணுமென்று
அறந்தழைக்கு மீசர்முன் அவர்வைத்தா ரம்மானை
அப்போது ஈசுரரும் அன்பா யகமகிழ்ந்து
இப்போது மாயவரே எல்லோருக் கும்போதுவாய்
நீர்தானே நாமம் இட்ட லதுபோதும்
பார்தா னளந்த பாலவண்ணா வென்றுரைத்தார்
கார்வண்ணருங் கேட்டுக் கறைக்கண்ட ரோடுரைப்பார்
தார்வண்ணரே முதற்பேர் தானுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றினதால்
தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு
சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும்
முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும்
மதமான விந்து மாயமுனி சேயதற்கு
சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும்
ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார்
நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு
தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள்
அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு
வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் 600
 
எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும்
சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே
பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து
பாருபதி நாமம் பகருவா ளம்மானை
சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு
மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும்
கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள்
பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந் தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை
சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத்
தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை
கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே 620

வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை
வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார்
இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார்
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து
சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம்
அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து
குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து
அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க
தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள்

சரஸ்வதி தாலாட்டு

வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம்நிசங் கண்ட மங்காத சான்றவரோ 640

சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும்
சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி யானவரோ
கொத்துமுங்கை யாபரணம் கொடிவிருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ
தாலம்பா லுண்டு தானிருந்த மன்னவரோ
நடைக்கா வணங்களிட்டு நல்லதீ வட்டியுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலே வீதிவலஞ் சுற்றிவந்து
துள்ளாடி சிங்கா சனம்வீற் றிருப்பவரோ
பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே
நாதமிரட் டையூதி நாடாளு மன்னவரோ
எக்கா ளமூதி இடமடம் மானமுடன்
மிக்கான சீமையெங்கும் மேவிவரு மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச் சான்றவரோ
கர்மம தில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ
தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக் குற்றவரோ
உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ 660

கல்விக் குகந்த கருணாகர ரானவரோ
செல்விக் குகந்த சென்மமது கொண்டவரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும்
மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன்
மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ
சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக்
கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ
அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும்
செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ
துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக்
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ
ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ

தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ
சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ
துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ
சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ 680

கற்பகத்தரு

சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி
ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம்
சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும்
வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று
கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை
வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும்
பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார்
அப்படியே வானோர் ஆகாய மீதேகி
செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே
ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே
சீருரூப மான சிவகயிலை யானதிலே
பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற
வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும்
அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத்   700

தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல்
ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில்
கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும்
பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக
அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள்
பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம்
உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து
வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே
சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு
நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க
அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார்
எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம்
கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார்
அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய்
மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட
இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன் 720

இப்போது இட்ட இச்சாப மானதுதான்
எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன்
நீசக் குலமறுத்து நெடிய திருமாலும்
மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு
அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர்
வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார்
உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று
தடமேலே நின்று தால மெனவளர்ந்தார்
வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும்
பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு
அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக்
குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி
உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம்
எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ
பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து
ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து

பத்திரத்தாள் பெற்றமக்கள்

பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில்
ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார்
அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும்
கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும் 740

மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும்
பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும்
அடவு மேலான அதிகப்பல வித்தைகளும்
திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி
எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும்
நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து
உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை
நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே
அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும்
கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே
அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள்
என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர்
உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி
என்றேதான் காளி இப்படியே சொல்லியபின்
பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால்
கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி
சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு
பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ
மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால்
குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று    760

சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து
வல்ல பெலமுள்ள மாடுதனி லேறியையும்
வேதாவும் நல்லநெற்றி விழியுடை யாள்தனையும்
மாதாவு மான வாய்த்தசர சோதியையும்
தேவர்முதல் வானவரை சிட்டர்முனி வோர்களையும்
மூவர்களை யுங்கயிலை ஊரேபோ மென்றனுப்பி
காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய்வள நீயென்று
ஆழி யடைத்த அச்சுதருந் தான்நடந்து
சீரங்க மாபதியில் சென்றிருந்தா ரம்மானை
சாரங்கர் சீரங்கம் தான்வந்தா ரென்றுசொல்லி
சீரங்க மெல்லாம் செழித்து மிகவாழ்ந்து
பாரெங்கு மெச்சிப் பரந்துகா ணம்மானை
அப்படியே அச்சுதரும் அப்பதியி லங்கிருக்க
எப்படியும் சீரங்கம் இனிதழைக்கு மென்றுமிக
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித்
தேவருங் கொண்டாடி சிந்தைமகிழ்ந் தேயிருந்தார்
சீரங்க மான திருப்பதியின் வளமை
சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை
மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து
ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து 780

படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது
கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும்
அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும்
கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை
மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை
மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும்
ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும்
அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும்
கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு
பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர
ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார்

சான்றோர் பெருமை

சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது
சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை
சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை
நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க
அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை
தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும்
வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி
கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு
வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப்    800

பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள்
மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில்
தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி
படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி
நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப்
போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து
ஆர்க்க முள்ளகாளி அலகைப் படையுடனே
சான்றோரை விட்டுத் தக்கனையுந் தான்வதைத்து
மூன்றோரை நெஞ்சில்வைத்து ஓங்கார மாகாளி
தக்கனையுங் கொன்று சான்றோ ரவர்தமக்கு
மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி
புட்டா புரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்துநிற்க
கட்டாத காளி கமலத்தில் வீற்றிருந்தாள்

சான்றோர் திருமணம்

அப்போது நல்ல ஆர்க்கமுள்ள பாலருக்கு
இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணுமென்று
பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி
நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை
அழைத்துநல்ல மாகாளி அந்தமுனி யோடுரைப்பாள்
விழைத்துநல்ல புத்தி விபரமிட்டுச் சொல்லுகின்ற
மாமுனியே யென்றன் மக்களேழு பேர்களுக்கும் 820

நீமுயன்று பெண்ணேழு நிச்சயிக்க வேணுமென்றாள்
நல்லதுதா னென்று நாரத மாமுனிவன்
வல்லவகை யாலுன் மக்களுக்குப் பெண்ணேழு
பார்த்துவரு வேனென்று பகர்ந்துமுனி போயினனே
சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன்
நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான்
பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே
மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத்
தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை
நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும்
செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும்
இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக
நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி
ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று
பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண்
அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து
இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில்
கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன்
தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும்
தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி 840

கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும்
மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம்
மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய
உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும்
ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது
மான முனியே மற்றெவர்க்கு மாகாதே
என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க
நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து
மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில்
சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே
அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு
இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று
சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து
நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை
நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட
தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை
மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும்
வாகான மன்னன் வாய்த்த நிருபனுட
மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு   860

மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே
என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள்
நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள்
தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள்
பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே
உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே
அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம்
செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு
கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான்
நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில்
தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த
நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும்
வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி
மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப்
பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக்
கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம்
ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள்
நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே
பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி 880

பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய்
ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே
காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க
மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது
ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி
தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே
வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது
சூதான மான தோகை யேழுபேரும்
பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு
காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது
வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க
தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும்
அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை
இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி
சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து
நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ
உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று
திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு
நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய 900

கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு
முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய
பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை
வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத்
துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி
முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக்
கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி
மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு
காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து
வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக
நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து
வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும்
திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள்
வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது
நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி
பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச்
சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி
பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று
இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து
மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க 920

தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க
பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க
ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப
பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க
நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து
மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி
வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப்
பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி
சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார்
தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு
மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை
நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள்
எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை
சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத்
தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி
அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர
விரைவாகக் காளி வித்தகலை யேறிவர
அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே
வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர
ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே 940

மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர
நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு
விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள்
நிருபன் மகளை நியமித்து மாலையிட
வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப்
பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத
இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி
அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும்
மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை
வாலையது வான மாகாளி வாழுகின்ற
மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை 952

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்துஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்துவேதியரும் நன்றாய் விளம்புவா ... மேலும்
 
temple news
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்தாட்டிமையாய்ச் ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்கவிருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்வையங்க ளெல்லாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar