பதிவு செய்த நாள்
08
செப்
2021
02:09
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கிக்கொண்டிருப்பதால், வழிபாட்டுக்கான சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது.கொரோனா ஊரடங்கு இருந்தாலும், கடந்தாண்டு, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.தமிழக அரசு, பொது அமைப்பினர் சதுர்த்தி விழா கொண்டாடவும், விசர்ஜன ஊர்வலத்துக்கும் தடை விதித்துள்ளது.
அவரவர், வீடுகளில், சதுர்த்தி விழாவை கொண்டாடவும், வழிபட்ட சிலைகளை அருகே உள்ள கோவில்களில் வைக்கவும், மாவட்ட நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சர்வோதய சங்கங்கள் மற்றும் சாலையோர கடைகளில், விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிட்டன. களி மண்ணில் செய்யப்பட்ட சிலைகள், கண்ணை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு, விற்பனைக்கு தயாராக உள்ளது.விநாயகர் சிலை மட்டுமல்லாது, பூ, கடலை -பொரி, அவல் பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், வாழை, சாத்துக்குடி, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. விநாயகர் சிலையை அலங்கரிக்கும் மலர் மாலைகள், பேன்ஸி குடைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கடைகளில், 50 ரூபாயில் துவங்கி, 2,500 ரூபாய் வரையிலான மதிப்புள்ள விநாயகர் சிலைகள், விற்பனைக்கு அணிவகுத்துள்ளன. கூட்டத்தில் சிக்காமல், முன்கூட்டியே சிலைகளை வாங்கி செல்ல, மக்களும் தயாராகிவிட்டனர்.