பதிவு செய்த நாள்
08
செப்
2021
05:09
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலத்தில், நேற்று கண்டெடுக்கப்பட்ட மூன்று சிலைகள் குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது: அரசாணிமங்கலம் வயல்வெளியில், 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று கற்சிலைகளைக் கண்டறிந்தோம்.மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது 2.5 அடி உயரம், 2 அடி அகலத்தில் அமர்ந்த நிலையில், அடிப்பாகம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. இரண்டாவதாக, வேப்பமரத்தடியில் 3.5 அடி உயரம், 2 அடி அகலத்தில், தலைமுடி ஜடாபார சிகை அலங்காரத்துடன் அய்யனார் சிலை கண்டெடுத்தோம்.மூன்றாவதாக, ஆலமரத்தடியில் ஒரு பெண் சிலை, அழகிய வேலைப்பாடுகளுடன் முகம் மட்டும் தெரிந்த நிலையில், எஞ்சிய பகுதி மண்ணில் புதைந்துள்ளது. இதைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்த பின்பே முழு விபரம் அறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.