விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை.
ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒரு சக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன் கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரைக் கணங்களின் அதிபதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெருமான். கணபதியைத் தம் மீது அமர்த்திப் பட்டாபிஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:
பிடியதன் உருவுமை கொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!
விநாயகர் அவதாரம்: விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.