பதிவு செய்த நாள்
09
செப்
2021
07:09
மேட்டுப்பாளையம்: விநாயகர் சிலைகளை மொத்தமாக, ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றில் கரைக்க அனுமதி இல்லை என, போலீசார் அறிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், இந்து முன்னணியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பேசுகையில்," கொரோனா நோய்த்தொற்று காரணமாக, சமூக இடைவெளி விட்டு, பாதுகாப்புடன், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, கொண்டாட வேண்டும். சிலைகள் வைக்கும் இடங்களை கண்டிப்பாக கிருமி நாசினி மருந்து தெளித்து இருக்க வேண்டும். சிலை அருகே உள்ளவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, வருகின்ற பக்தர்களுக்கு கிருமிநாசினி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சிலைகள் முன்பும், ஆட்கள் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு, மொத்தமாக, ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தனித்தனி சிலையாக மட்டுமே எடுத்து சென்று ஆற்றில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது," என்றார். இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார் பேசுகையில், மேட்டுப்பாளையம் நகரில், 39 இடங்களில், மூன்றரை அடி முதல், ஐந்தரை அடி வரை விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. சிலைகள் அதிகாலை, 5:00 மணிக்கு பிரதிஷ்டை செய்து, மாலை, 5:00 மணிக்கு சிலைகள் கரைக்கப்பட உள்ளது. சிலைகள் கரைக்கும் இடமான சுப்பிரமணியர் சுவாமி கோவில் அருகே, ஆற்றுக்கு செல்லும் வழி மற்றும் கரையோரத்தில் சுத்தம் செய்து, மின் விளக்குகள் ஏற்பாடு செய்து தரவேண்டும், என்றார்.