சென்னை: ‛‛தமிழகத்தில் கோயில் நிலங்கள் மட்டுமல்ல; கோயில் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகிறது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் 12 ஆயிரத்து 959 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதன்படி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தற்போது 24 மணி நேரமும் செயல்படும் துறையாக உள்ளது. கோயில் நிலங்கள் மட்டுமல்ல; கோயில் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் 170 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 13 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஆனால், இந்த திட்டத்தின் மூலம் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர் என்பதால் இதை செலவு என்று சொல்லமாட்டேன். ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார். மேலும் பல திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.