மும்பை: விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கொரோனா பரவலுக்கு இடையே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் துவங்கின.
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட போதிலும் அங்கு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை பரவல் இன்னும் முடியாத நிலையில், மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது என, மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.இதையடுத்து, இந்த ஆண்டும் மஹாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விழாவை கொண்டாட, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வழிபட, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்படும் வழிபாடுகளை ஆன்லைன் வழியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி நடக்கும் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில, ஐந்து பேருக்கு மேல் பங்கேற்க, மாநில அரசு தடை விதித்துள்ளது.