பதிவு செய்த நாள்
11
செப்
2021
06:09
திருப்பரங்குன்றம் :ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகளின் போது சுவாமி முன்பும், திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போதும் திருமுறை பாடல்களை ஒன்றல்ல இரண்டல்ல 32 ஆண்டகளாக பாடி வருகிறார் ஓதுவார் கே.சுப்பிரமணியன் 62.
திருநெல்வேலி மாவட்டம் சிவசைலத்தில் பிறந்த இவர் 1971ல் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தில் திருமுறையை பயின்றார். 1976ல் குன்றக்குடி அடிகள் ஆசியுடன் பிரான்மலையில் ஓதுவார் பணியை துவக்கினார். 1979 வரை பணிபுரிந்து 1984 வரை ஈரோடு திருமுறை கழகத்திலும், பின் 1989 வரை மருதமலையில் பணியை தொடர்ந்தார். 1989ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓதுவாராக பொறுப்பேற்று திருமுறை பணியை இன்று வரை தொடர்கிறார்.
தேவார இசைமணி, பன்இசைமணி, திருவாசகமணி, திருமுறை இசை செல்வர், திருமுறை கலாநிதி, திருநாவுக்கரசர் இசைமணி, திருநெறிய தமிழ் இசை செல்வர் உள்ளிட்ட பட்டங்களை பெற்றிருந்தாலும், திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயா வேத பாடசாலை சார்பில் வழங்கப்பட்ட திருமுறை பேரொலி பட்டத்தை பெரிதும் கருதுவதாக கூறுகிறார், சுப்பிரமணியன்.
இனி அவரே தொடர்கிறார்... தாத்தா, தந்தையை தொடர்ந்து நானும் ஓதுவார் பணி மேற்கொண்டு வருவதில் பெருமை அடைகிறேன். கடவுள் முன் திருமுறை பாடல்கள் பாட பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடவுளை தரிசிப்பதே பாக்யம். அதிலும் தினமும் 6 முறை கடவுள்முன்பு நின்று பாடல்கள் பாடுவது எத்தனை ஜென்ம புண்ணியம் என தெரியவில்லை. கஷ்டங்கள், பிரச்னைகள் வந்தாலும் கடவுள் முன் பாடும்போது அவற்றை எதிர் கொள்ளும் மன நிலை கிடைத்து விடும்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மொரீசியஸ் சென்று தமிழ் இசை திருமுறைகளை அங்குள்ள தமிழர்கள், மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தது மிகுந்த மனநிறைவை தருகிறது. பணி ஓய்வு பெற்றாலும், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தாளாளர் கருமுத்து கண்ணன் மாத சம்பளமும் வழங்கி கோயிலில் தொடர்ந்து பாட வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
வாழ்த்த 96002 93989