தூத்துக்குடி: அங்கமங்கலம் அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா கோயிலில் ஆனி உத்திர தரிசன நிகழ்ச்சி இன்று நடக்கிறது. விழாவில் அரசு தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கும் பாராட்டு விழா நடக்கிறது. அங்கமங்கலம் அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா கோயிலில் இன்று ஆனி உத்திர தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. உத்திரதிருவிழாவை முன்னிட்டு 108 பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி நடந்த வித்யா கணபதிஹோம பூஜையில் கலந்துகொண்டு அரசு தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு 108 பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் பௌர்ணமி தோறும் நடக்கக்கூடிய திருவிளக்கு பூஜை வெளியூர் பக்தர்களின் வசதிக்காக இன்று நடக்கிறது. பகல் 12 மணிக்கு மேல் சிறந்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கமங்கலம் அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.