பதிவு செய்த நாள்
27
ஜூன்
2012
11:06
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அய்யனார் கோவிலில் இருந்த, உலோக சிலைகளை, பாதுகாப்பு கருதி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று கடலூர் கோவிலில் வைத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பாங்குளம் கிராமத்தில், கரந்தை அய்யனார் கோவிலில், கடந்த 10 நாட்களுக்கு முன், மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். தகவலறிந்த இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தேவராஜ் மற்றும் ஊ.மங்கலம் போலீசார், அய்யனார் கோவிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், பாதுகாப்பு இல்லாததால், உண்டியல் உடைத்து திருடப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து, கோவிலுக்குள் இருந்த உற்சவர் சிலைகளை, பாதுகாப்பு கருதி, எடுத்துச் செல்வதாக, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதற்கு கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, திருவிழா காலங்களில் சிலைகளை கோவிலுக்கு திரும்பவும் கொண்டு வருவதாக, அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள், சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். இதனையடுத்து, கோவிலில் இருந்த முருகன், அய்யனார், பெருமாள், சண்டிகேஸ்வரர், பிடாரியம்மன், மாரியம்மன், சிவன் உட்பட 14 உலோக சிலைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அச் சிலைகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.