பதிவு செய்த நாள்
22
செப்
2021
04:09
புதுடில்லி: கேரள பத்மநாப சுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில், ‛‛திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது, என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மாநில அரசு இக்கோவிலை நிர்வகிக்க தனி அறக்கட்டளையை அமைக்கலாம் என, கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2011ல் உத்தரவிட்டது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு, கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் கோவிலுக்கான வரவு - செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. இந்நிலையில், கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் மீதான விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், பத்மநாப சுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது. இன்னும் 3 மாதத்துக்குள் அல்லது எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கணக்கு தணிக்கையை முடிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.