பதிவு செய்த நாள்
27
செப்
2021
04:09
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூரில், மண் மற்றும் காகிதக்கூழ் கொண்டு பல்வேறு விதமான ஆன்மீக காட்சிகளை கொலுப்பொம்மையாக உருவாக்கியுள்ள கலைஞரை, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோவில் நடந்த டோலேர்த்சவம் நிழ்வில் கலந்துக்கொண்டு, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் வழிபாடு செய்தார். தொடர்ந்து பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜை சந்தித்துப் பேசினார். அதையடுத்து, தொடர்ந்து சத்திரம் கருப்பூரில் மண் மற்றும் காகிதக்கூழ் கொண்டு, பல்வேறு ஆன்மீகம சார்ந்த நிகழ்வுகளையும், காட்சிகளையும் கொலு பொம்மைகளை உருவாக்கி கலைஞர் ரமேஷ்குமாரை பாராட்டினார்.
பின்னர், ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் கூறுகையில்; நவராத்திரி என்பது ஆன்மீக விழா மட்டுமல்ல. இது சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது. ஒருவருக்கு வாழ்வில், எவ்வித தடைகளையும் தாண்டி வெற்றி பெற தைரியம், தன்னம்பிக்கை அவசியம். அதற்கு அடையாளமான துர்காதேவியை வழிபட வேண்டும். அதே போன்று வாழ்வில் அமைதியையும், செழிப்பையும் பெற லட்சுமி தேவியை பிரார்த்தனைச் செய்ய வேண்டும். அறிவைப் பெறுவதற்கு சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். இந்த மூன்றும் ஒரு முழுமையான உலக வாழ்க்கைக்கு அவசியமானவை. நாம் இவ்வாறு வணங்கும் போது நமக்குள் இருக்கும் சக்தி தூண்டப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை குணங்களை வளர்க்கும் பண்புகள், நற்குணங்களை மூன்று தேவியரும் அருளுகின்றனர். மேலும் இளம் தலைமுறையினருக்கு நமது பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளமாக நவராத்திரி விழா உள்ளது. தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் நகர மையமான சிவாஜி நகர் மடத்திலும், கிராம மையமான புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் வடவாற்றங்கரை மடத்திலும் வரும் 6ம் தேதி அமாவாசை முதல் 15ம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு கிராமிய பக்தி இன்னிசை மற்றும் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், விளக்குபூஜை உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் வீட்டில் நவராத்திரி வழிபாட்டினை மேற்கொண்டு இறையருளைப் பெற வேண்டும். கூட்டு வழிபாடு செய்து அனைத்தும் சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வோம். இறைவனின் அவதார பெருமைகளை விளக்கும் வரலாற்று பெருமைகளை தத்ரூபமாக மண் மற்றும் காகித கூழ் கொண்டு பொம்மைகள் தயாரிப்பது பாராட்டுக்குரியது என சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் கூறினார்.