பதிவு செய்த நாள்
28
செப்
2021
04:09
மயிலாடுதுறை: சமயப் பணியுடன் நின்றுவிடாமல், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், சமுதாய பணிக்கும் வர வேண்டும், என, திருச்சி தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலையில், மகாளயபட்ச விசேஷ சதுர்வேத பாராயணம், வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. ஒரு பகுதியாக, கொரோனா பாதித்து இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய, மகாளயபட்சத்தில் சிறப்பு பிரார்த்தனையும், 201 மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.திருச்சி தினமலர் வெளியீட்டாளரும், தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவரும், தெய்வீக கைங்கர்ய பேரவைத் தலைவருமான ஆர்ஆர்.கோபால்ஜி தலைமை வகித்து பேசியதாவது:கோவில்கள் கட்டி, இறை தொண்டு செய்த மன்னர்கள், அந்தந்த கோவில்களில் இப்படித்தான் பூஜைகள் நடக்க வேண்டும் என்பதையும், திருவிழாக்கள், சம்பிரதாய முறைகளையும் கல்வெட்டில் குறிப்பிட்டு சென்றுள்ளனர்.
அதை மாற்றுவதற்கு எந்த அரசுகளுக்கும் அதிகாரம் இல்லை.கோவில்களை பொறுத்தவரை, அதன் சொத்துக்கள், தெய்வத்திருமேனிகள், நகைகளை பாதுகாக்கும் பணியை செய்யும் காவலாளி மட்டுமே, அரசு. கோவில் சம்பிரதாய விஷயங்களில் தலையிடக் கூடாது.தமிழகத்தில், 2 லட்சம் கிராம தேவதை கோவில்கள் உள்ளன. அதை சார்ந்து, 6 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுக் கணக்கு மட்டுமே புரியும். ஓட்டு வங்கி யாரிடம் இருக்கிறதோ, அவர்களிடம் போய் தான் நிற்பார்கள். கோவில்களுக்கு வந்து, தேர்தலில் வெற்றி பெற பூஜை செய்ய சொல்கிறார்களே தவிர, நம்மிடம் வந்து ஓட்டு கேட்பது கிடையாது. சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் சமயத்துடன் நிற்காமல், சமுதாய பணிக்கும் வர வேண்டும். அப்போது தான், கோவில்களை காப்பாற்ற முடியும்.
கோவில்களுக்கு, 6 லட்சம் ஏக்கர் சொத்து, வைப்பு நிதி, உண்டியல் வருவாய் இருந்தும், கோவில்களில் இறை பணி செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அர்ச்சனை டிக்கெட் விற்றால் பங்குதொகை வந்து சேர்வதில்லை. இப்படி மோசமான நிலையில் தான் அறநிலையத்துறை இருக்கிறது. தெய்வீக கைங்கர்ய பேரவையில், ஒரு லட்சம் பேர் இருப்பார்கள். இவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தினால் தான், அரசு நம்மை திரும்பி பார்க்கும்.இவ்வாறு, ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார்.