பதிவு செய்த நாள்
30
செப்
2021
08:09
புதுடில்லி : திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடப்பதில்லை; தவறாக நடத்தப்படுகிறது என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, திருலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உச்ச நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில், ஏழுமலையான பக்தர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பதியில் ஏழுமலையானுக்கு அபிஷேக சேவை, தோமாலா சேவை, ஆர்ஜித் பிரம்மோற்சவம் உட்பட பல பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுவதில்லை. தவறாகவும் நடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், திருப்பதி தேவஸ்தானத்தின் விதிமுறைகளிலும், அதன் நடவடிக்கைகளிலும் தலையிட முடியாது என உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த ஏழுமலையான் பக்தர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹீமாகோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி ரமணா தெலுங்கிலேயே பதில் கூறினார்.
அதன் விபரம்:நான், என் குடும்பத்தினர், இங்குள்ள அனைவரும், ஏழுமலையான் மீது மிகவும் பக்தி கொண்டவர்கள். தனக்கு நடக்க வேண்டிய பூஜை உட்பட அனைத்து வழிபாடுகளும், சரியான முறையில் நடக்கவில்லை என்றால், அதை ஏழுமலையானே பொறுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கான பூஜைகளும், வழிபாடுகளும் பாரம்பரிய முறைப்படி தான் நடக்க வேண்டும் என அனைத்து பக்தர்களும் விரும்புகின்றனர். எனவே, தேவஸ்தானத்தின் வழக்கறிஞர், மனுதாரரின் கேள்விகளுக்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்,.விசாரணை, வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.