பதிவு செய்த நாள்
30
செப்
2021
08:09
தர்மபுரி: புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று, தர்மபுரி, அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தர்மபுரி, அதியமான்கோட்டையிலுள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை வலம் வந்து, காலபைரவரை தரிசிப்பது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால், கோவிலை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மட்டும் செய்து கோவில் பூட்டப்பட்டது. இதில், பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஒருசில பக்தர்கள் கோவிலுக்கு முக கவசம் அணிந்து வந்து, சாம்பல் பூசணியில் தீபமேற்றி கோவில் முன் நின்று வழிபட்டுச்சென்றனர்.