திருவந்திபுரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்: மொட்டை அடித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2021 09:09
கடலுார்: திருவந்திபுரத்தில் சனிக்கிழமை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். சின்ன திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.புரட்டாசி மாதம் சனிக்கிழமை மற்றும் இம்மாதம் முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு, மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசேஷ நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.புரட்டாசி மாதமான தற்போது, கோவிலில் அனுமதிக்கப்படும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று அதிக அளவி்ல் பக்தர்கள், கோவில் நுழைவு வாயில் அருகே வழிபட்டுவிட்டு திரும்பினர்.கோவிலில் மொட்டை அடிக்க அனுமதியில்லாததால், கோவில் அருகே கெடிலம் ஆற்றுப்பகுதியில் மறைவாக மொட்டை அடித்துக்கொண்டு, கோவில் அருகே வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இலவசமாக மொட்டை போட அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோவிலில் மொட்டை அடிக்கும் இடங்கள் நிரம்பி வழிந்தன. மொட்டை அடிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் வாங்கினர். இதனால் மொட்டை அடிக்கும் இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடாமல் இருக்கும் வகையில், கோவில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் திருவந்திபுரம் கோவிலில் இடைவிடாது பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.