மைசூரு: பீரங்கி வெடித்து ஒத்திகை பார்த்த போது, மூன்று தசரா யானைகள் மிரண்டன. பாகன்கள் அவற்றை கட்டுப்படுத்தினர். மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, பீரங்கிகள் மூலம் வெடிக்க செய்து, அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்கான ஒத்திகை, அரண்மனை வளாகத்தில் உள்ள மாரம்மா கோவில் எதிரில் நேற்று நடந்தது. ஏழு பீரங்கிகள் மூலம், 21 முறைசுட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. பலத்த சத்தம் எழுந்ததால் லட்சுமி, கோபால சுவாமி, அஸ்வதம்மா ஆகிய மூன்று யானைகள் மிரண்டன. சத்தம் போட்டு கொண்டே பின்னோக்கி செல்ல முற்பட்டன. அவற்றை யானை பாகன்கள் கட்டுப்படுத்தினர். குதிரைகளும் பயந்தன. இது குறித்து, தமிழரான, மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி கரிகாலன் கூறுகையில்,‘‘பீரங்கி ஒத்திகையின் போது யானைகள் நல்ல விதமாக நடந்து கொண்டன. இன்னும் இரண்டு முறை ஒத்திகை நடத்தப்படும்,’’என்றார்.