பதிவு செய்த நாள்
02
அக்
2021
04:10
சென்னை : அனைத்து நாட்களிலும் கோவிலுக்குச் செல்ல அனுமதி கோரி, வரும் 7ம் தேதி, முக்கிய கோவில்கள் முன், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:புனித நாளாக கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில், தி.மு.க., அரசு கோவில்களை மூடுகிறது.அதை மாற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்ற வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி.தடுக்க நினைப்பது, தீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
தமிழக அரசின் கோவில் பராமரிப்பு, அறநிலையமாக நடக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் வணிக நிறுவனமாக நடக்கக் கூடாது.கோவில் திறக்காது இருப்பதற்கு, கொரோனா நோயை காரணமாக சொல்வது நகைப்பிற்குரிய செயல். மாற்று மதங்களின் இறை வழிபாட்டு தலங்கள், எந்த இடையூறும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்குகின்றன என்பதை நிரூபிக்க, பல சான்றுகள் உள்ளன. கோவிலை நம்பியிருக்கும் தேங்காய், பூ, பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் கோவில் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7ம் தேதி காலை 11:00 மணிக்கு முக்கிய கோவில்கள் முன், பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வர்.இந்த போராட்டத்தை, முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா ஒருங்கிணைக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.